ரூ.25 சேவைக் கட்டணமா?: எஸ்.பி.ஐ. மறுப்பு
ஏடிஎம்ல் இருந்து பணம் எடுக்க ஒவ்வொரு முறைக்கும் ரூ.25 சேவை கட்டணம் வசூலிக்கப்படும் என்று வெளியான செய்திகள் தவறானது என எஸ்.பி.ஐ. தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுத் துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி, பெருநகரங்களில் இருப்பவர்கள் ரூ.5,000 வங்கிக் கணக்கில் வைத்திருக்க வேண்டும் என்று அறிவித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
அந்த அதிர்ச்சி குறைவதற்குள், ஜூன் மாதம் முதல் எஸ்.பி.ஐ. ஏ.டி.எம்.களில் இருந்து பணம் எடுக்க ஒவ்வொரு முறையும் ரூ.25 சேவை கட்டணம் வசூலிக்கப்படும் என்று இன்று (மே-11)அறிவிப்புகள் வெளியானது.
மாதத்திற்கு 4 முறைக்கு மேல் பிற ஏடிஎம்ல் பணம் எடுத்தால் ஒவ்வொரு முறைக்கும் ரூ.50 கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், ஏடிஎம்ல் இருந்து பணம் எடுக்க ரூ.25 சேவை கட்டணம் வசூலிக்கப்படும் என்று வெளியான செய்திகள் தவறானது என்று எஸ்.பி.ஐ. தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொபைல் வாலட்டுக்கு கட்டணம்
இது குறித்து எஸ்.பி.ஐ. அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், ரூ.25 சேவைக் கட்டணம் வசூலிப்பு என்பது மொபைல் வாலட்டுக்கு மட்டும் தான் என்றனர். இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.