பிளஸ் 2 சான்றிதழ் வெளியானது முதன்முதலாக தமிழுக்கு முக்கியத்துவம்
பிளஸ்2தேர்வில், மாணவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ் நேற்று வெளியானது. இதில், முதன்முதலாக, தமிழில் விபரங்கள் இடம் பெற்றுள்ளன. பிளஸ் 2, 10ம் வகுப்பு தேர்வுகளில், தமிழக பள்ளிக்கல்வித் துறை அதிரடி மாற்றங்களை செய்து வருகிறது. முதன்முதலாக, மாநில, மாவட்ட அளவிலான, 'ரேங்கிங்' முறை ரத்து செய்யப்பட்டது. இதற்கு, பல தரப்பிலும் ஆதரவுகள் குவிந்துள்ளன.இந்நிலையில், பிளஸ் 2 தேர்வுக்கான தற்காலிக சான்றிதழ், நேற்று, தேர்வுத்துறையின், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பதிவு எண், பிறந்த தேதி, மாதம், ஆண்டு ஆகியவற்றை பதிவு செய்து, மாணவர்களே, மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்யலாம். நாளை முதல் பள்ளிகளில், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்.இந்த ஆண்டு சான்றிதழில், முதன்முதலாக மாணவரின் பெயர், பள்ளியின் பெயர் போன்ற விபரங்கள், தமிழில் இடம் பெற்றுள்ளன. சான்றிதழில், தமிழுக்கு முக்கியத்துவம் தரப்பட்டு, தமிழிலும், அதையடுத்து ஆங்கிலத்திலும், விபரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.மாணவர்களின் தேர்வு எண், அவர்கள் படித்த பாடப்பிரிவின் குறியீட்டு எண், சான்றிதழுக்கான நிரந்தர பதிவு எண், பயிற்று மொழி, தேர்வு முடிவு தேதி போன்றவை இடம் பெற்றுள்ளன. தற்காலிக சான்றிதழ், தேர்வு முடிவு வெளியான தேதியிலிருந்து, 90 நாட்களுக்கு மட்டுமே செல்லும்.