11 - ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு மாணவர்களுக்கு சாதகமா... பாதகமா?
10 மற்றும் 12 -ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் தேர்வு முடிவுக்காக காத்திருக்கும் சூழலில், வரும் கல்வி ஆண்டிலிருந்து 11-ம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு நடத்தப்படவிருக்கிறது எனும் செய்தி உலவுகிறது.
இதை கல்வித் துறை அதிகாரிகள் உறுதி செய்யவில்லை என்றாலும் கல்வி வட்டாரப் பகுதிகளில் இந்தச் செய்தி பரவலாக பேசப்படுகிறது. அப்படி, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு கொண்டுவரப் பட்டால் என்னவாகும்? குறிப்பாக, மாணவர்களுக்கு அது என்ன மாற்றத்தைக் கொண்டு வரும்... சாதகமா அல்லது பாதகமா? என்பது குறித்து கல்வியாளர், பேராசிரியர் கல்விமணி அவர்களிடம் கேட்டோம்.
இதை கல்வித் துறை அதிகாரிகள் உறுதி செய்யவில்லை என்றாலும் கல்வி வட்டாரப் பகுதிகளில் இந்தச் செய்தி பரவலாக பேசப்படுகிறது. அப்படி, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு கொண்டுவரப் பட்டால் என்னவாகும்? குறிப்பாக, மாணவர்களுக்கு அது என்ன மாற்றத்தைக் கொண்டு வரும்... சாதகமா அல்லது பாதகமா? என்பது குறித்து கல்வியாளர், பேராசிரியர் கல்விமணி அவர்களிடம் கேட்டோம்.
"நீங்கள் குறிப்பிடும் விஷயம் இன்னும் உறுதியாகவில்லை என்றாலும், அதை ஒட்டி சிலவற்றை அலசலாம் என நினைக்கிறேன். முதலில், 9-ம் வகுப்பு வரை முப்பருவத் தேர்வு முறையை நடைமுறைப் படுத்திவிட்டு 10-ம் வகுப்புக்கு ஒரே தேர்வு என வைத்திருப்பது முறையானது அல்ல. ஏனெனில் ஒன்பது ஆண்டுகள் ஒரு குறிப்பிட்ட தேர்வு முறைக்கு மாணவர்கள் தயாராகி வரும் சூழலில் ஒரே ஆண்டுக்குள் அதை மாற்றிச் செய்வது மாணவர்களுக்கு அவ்வளவு எளிதானதல்ல. அந்தத் தேர்வுக்கு தயாராவது பல மாணவர்களுக்கு சுமையாகவே இருக்கிறது. இது ஒருபுறம் வைத்துக்கொள்வோம். சில பள்ளிகளில் (தனியார் மற்றும் அரசுப் பள்ளி இரண்டையும் சேர்த்தே சொல்கிறேன்) 12-ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் குவிப்பதற்காக 11- ம் வகுப்பு பாடங்களை நடத்துவதே இல்லை.
10-ம் வகுப்பு முடித்து பள்ளிக்குச் செல்லும் மாணவர் ஒருவர், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு 12-ம் வகுப்பு பாடங்களையே திரும்பத் திரும்ப படிக்க வேண்டியதாகிறது. எவ்வளவுதான் பிடித்த பாடம் என்றாலும் ஒரு விஷயத்தைத் திரும்பத் திரும்ப படிப்பது சோர்வூட்டச் செய்யும். மேலும், மேல்நிலைக் கல்வியில் ஓர் ஆண்டு பாடங்களைப் படிக்காமல் கடப்பது, மாணவர்களின் அறிவு வளர்ச்சிக்குப் பெரிய தீங்கு. 11-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு வைக்கும்பட்சத்தில் கட்டாயம் அந்த ஆண்டுக்கு உரிய பாடங்களைப் படிக்கும் வாய்ப்பு மாணவர்களுக்கு கிடைக்கும்.
12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்களைக் கொண்டுதான் மேல் படிப்புக்குச் செல்கிறார்கள் எனும்போது அதுவே போதுமே என சிலர் நினைக்கலாம். முன்பே சொன்னதுபோல, ஓர் ஆண்டுக்கான பாடங்களை மாணவர் படிக்காமல் கடந்துசெல்லக்கூடாது. மேலும், 11-ம் வகுப்புப் பாடங்களின் தொடர்ச்சிதான் 12-ம் வகுப்புப் பாடங்கள். எனவே, அடிப்படையைத் தெளிவாக படிக்காமல் அடுத்த நிலைக்குச் செல்லும்போது, மேல் வகுப்புப் பாடங்களைப் புரிந்துகொள்வதில் கடுமையான சிக்கல்கள் ஏற்படக்கூடும். அப்படி புரிந்துகொள்ள முடியாமல் போகிறபோதுதான், அர்த்தம் புரியாமல் மனப்பாடம் செய்ய வேண்டியதாகிறது. இதுவும் மாணவரின் கற்றலுக்குத் தீங்கு ஏற்படுத்தக்கூடியதே.
மாணவர்கள் ஒரு பாடத்தைப் புரிந்துகொள்ளாமல் படிக்கும்போது, அந்தப் பாடப் பிரிவை மேற்படிப்புக்கு எடுத்தால் கற்றலில் கடும் பின்னடவை எதிர்கொள்வர். 12-ம் வகுப்பில் மிக அதிக மதிப்பெண்களைப் பெற்ற மாணவர்களும்கூட மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட படிப்புகளை படிக்கையில் தேர்ச்சி மதிப்பெண்களை எடுக்கவே சிரமப்படுவதையும் பார்க்க முடிகிறது. இதற்கு, முக்கியக் காரணம் அடிப்படையான பாடங்களைப் படிக்கும் வாய்ப்பு கிடைக்காததே.
மேற்படிப்புக்காக அகில இந்திய அளவில் நடத்தப்படும் நுழைவுத் தேர்வுகளில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் அதிகம் சோபிக்க முடியாமல் போவதற்காக காரணம். 11-ம் வகுப்பு பாடங்களைப் படிக்க முடியாமல் போனதே. ஏனெனில் நுழைவுத் தேர்வுகளில் 11-ம் வகுப்பு பாடங்களிலிருந்தும் வினாக்கள் கேள்விகள் கேட்கப்படுவதால், அந்த வினாக்களுக்கு இவர்களால் பதில் அளிக்கமுடியாமல் போய்விடுகிறது. இந்த ஆண்டு நீட் தேர்வு ஏறக்குறைய வந்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். அடுத்த ஆண்டு பொறியியல் படிப்புக்கான நுழைவுத் தேர்வுகள் வர விருக்கின்றன. அதையெல்லாம் மாணவர்கள் எதிர்கொள்ள 11-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு வரும்பட்சத்தில் உதவியாக இருக்கும்.
நுழைவுத் தேர்வுகள் தமிழிலும் நடக்கவிருப்பதால் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இந்த முறை பயனுள்ளதாக இருக்கும் என்றே நான் கருதுகிறேன். மாணவர்களுக்கு இது கூடுதல் சுமையையும் மன அழுத்தத்தையும் கொடுக்காதா என்று சிலர் கேள்வி எழுப்புகின்றனர். இப்போதைய சூழலிலேயே மாணவர்களுக்கு வீட்டுப்பாடம், வாரத் தேர்வு, மாதாந்திர தேர்வு என பல வித அழுத்தங்கள் இருக்கத்தான் செய்கின்றன. அதனால், கூடுதலான அழுத்தமாக இருக்கட்டும் என்பதாக கூறவில்லை. புதிதான அழுத்தம் வரப் போவதில்லை என்பதற்காக சொல்கிறேன். மேலும், இதன் மூலம் மேற்படிப்புக்கான அடிப்படைப் பகுதிகளைக் கூடுதல் கவனமாக படிக்கும் சூழல் உருவாகும்.
இந்த விஷயத்தில் எனக்கு இன்னொரு கருத்தும் இருக்கிறது. 11-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு என்பதாக இல்லாமல், மேல்நிலைக் கல்வி எனக்கொண்டு 11 மற்றும் 12 வகுப்புகளுக்கும் செமஸ்டர் முறை கொண்டு வந்தால் மாணவர்களுக்கு இன்னும் உதவியாக இருக்கும்." என்றார் கல்விமணி.
11-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முறை வருவதைப் பலரும் வரவேற்ற சமூக ஊடகங்களில் கருத்துகளைப் பகிர்ந்துவருகிறார்கள். அதற்கு மாற்றாக, மாணவர்களுக்கு சுமைக்கூடக்கூடும் எனும் கருத்துகளையும் பதிந்துவருகிறார்கள். கல்வி அதிகாரிகள் இரண்டு பார்வைகளையும் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். மிகுந்த சிரமங்களிடையே படிக்கும் மாணவர்கள் உயர்வு பெற வேண்டும்.