கல்விச்சிகரத்தின் குழந்தைகள் தினநல்வாழ்த்துக்கள்
நவம்பர் மாதம் என்றதுமே நினைவுக்கு வருவது குழந்தைகள் தினம். இதை நமது தேசம் முழுவதும் சிறப்பாகக் கொண்டாடுகிறோம். இந்த தினத்தை வேறு பாணியில், சாச்சா நேரு
என்று குழந்தைகள் மகிழ்ச்சியோடு கூறி வருகிறார்கள். அதாவது மறைந்த பாரத பிரதமர் பண்டிதர் ஜவகர்லால் நேரு, பச்சிழம் குழந்தைகள் மீது எத்தனை பாசமும் பரிவும் நம்பிக்கையும் வைத்திருந்தார் என்பதை நினைவூட்டிடும் வகையில், அவர் மறைவுக்குப்பின் இந்த நாள் வரை நாம் சிறப்பாகக் கொண்டாடி வருகிறோம். அந்த தினம் தான் நவம்பர் 14-ம் நாள்.மறைந்த நேரு அரசியல் துறையில் தேர்ச்சியும், ஞானமும், அனுபவமும் எத்தனை பெற்றிருந்தும், உள்ளத்தால் குழந்தை மனதையும் பெற்று இருந்ததால் இந்த இளம் குழந்தைகள் சரியான முறையில் போதிக்கப்படவேண்டும் என்ற விஷயத்திலும் ஆர்வம் காட்டினார்.அவர் வாழ்ந்த காலம் கடந்து போயிற்று. ஆனால் இன்றைய சுற்றுப்புற சூழ்நிலையில், தோன்றுகின்ற, வாழ்ந்து வருகின்ற குழந்தைகள் விசித்திரமான மன நிலையை, ஆர்வங்களை கொண்டு இருப்பதால் பெற்றோர்களுக்கு இது ஒரு சவாலாக தோன்றுகிறது. இருப்பினும் குழந்தைகள் தினத்தைக் குறிக்கும் இம்மாதத்தில் குறிப்பாக பெற்றோர்கள், ஆசிரியர்கள் தத்தம் குறைபாடுகளை நீக்கிவிட்டு, குழந்தைகளின் ஆர்வத்தையும், அனுபவத்தையும், ஆசைகளையும், அணுகுமுறைகளையும், மனநிலையையும் சில வினாடிகள் கூர்மையாக கவனித்துக் கொண்டு அதன்பின் அவர்களுக்கு எப்படியெல்லாம் பாடதிட்டங்கள், போதிக்கும் முறைகள் என்பதை தீர்மானித்துக் கொண்டால், அந்த சிறப்பான அணுகுமுறைதான் இன்றைய தலைமுறையினருக்கு குறிப்பாக குழந்தைகளுக்கு ஆக்கப்பூர்வமான சாதனைகளை நிகழ்த்தவும் சுபிக்ஷமான வாழ்க்கை வாழ்ந்து காட்டவும் உதவியாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை