ஆசிரியர் சம்பளத்தை மாணவர்களிடம் வசூலிக்கலாமா? – நீதிமன்றம் காட்டம்!
அரசு பள்ளிகளில் போதிய கழிவறை வசதி ஏற்படுத்தக் கோரிய வழக்கில், ஆசிரியர்களின் சம்பளத்தை மாணவர்களிடம் வசூலிக்கலாமா என உயர்நீதிமன்ற மதுரை கிளை தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது.மேலும், கல்விச் செயலரின் அறிக்கையையும் நிராகரித்துள்ளது.
மதுரையை சேர்ந்த ஆனந்தராஜ், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த 2014ஆம் ஆண்டு தாக்கல்செய்த மனுவில், ‘‘தமிழகத்திலுள்ள 5,720 அரசு பள்ளிகளில் போதிய கழிவறை வசதி இல்லையென மத்திய அரசின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும் பணிகள் சரிவர நடக்கவில்லை. இன்னும், கிராமப்புறங்களில் படிக்கும் மாணவர்கள் திறந்தவெளியைத்தான் பயன்படுத்துகிறார்கள். எனவே, பள்ளிகளில் போதிய கழிப்பறை, தண்ணீர் வசதிகளை செய்து தர உத்தரவிடவேண்டும்’’ என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை நேற்று நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, டி.கிருஷ்ணகுமார் ஆகியோர் விசாரித்தனர். அப்போது பள்ளி கல்வித்துறை இணைச்செயலர் நரேஷ், செயலர் சபிதாவின் அறிக்கையை தாக்கல் செய்தார். அறிக்கையை படித்துப் பார்த்த நீதிபதிகள்,செயலரின் அறிக்கையில் எந்த தொலைநோக்கு பார்வையும் இல்லை. இந்த அறிக்கையை ஏற்க முடியாது என தெரிவித்தனர். அப்போது, நீதிபதிகள் கூறியதாவது: அரசு பள்ளிகளுக்கு வழங்கப்படும் மின் கட்டணம் போதுமானதாக இல்லை. வணிக பயன்பாட்டு மின்சாரம் யூனிட் ரூ.5, பள்ளிக்கான கட்டணம் ரூ.5.75 என வசூலிக்கப்படுகிறது. வணிக பயன்பாட்டை விட பள்ளிகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கிறீர்கள். இதை ஏன் இன்னும் சரி செய்யவில்லை? இதனால், ஒதுக்கீடு செய்யும் நிதி போதுமானதாக இல்லாததால், பெற்றோர் ஆசிரியர் சங்கத்திடமிருந்து செலுத்தப்படுகிறது. வேண்டுமானால் ஆசிரியர்களின் சம்பளத்தையும் மாணவர்களிடமே வசூலித்து கட்டலாமா? நீதிமன்றத்தில் உண்மை தகவல்களை தெரிவிக்கும் அரசு ஊழியர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கிறார்கள். இந்த நீதிமன்றத்தில் அரசு அதிகாரிகள் பயமில்லாமல் தைரியமாக தகவல்களை தெரிவிக்கலாம்.செயலரின் அறிக்கையில் உண்மைத்தன்மை இல்லை. அதை படிக்கும்போது சோர்வும், கண்ணீரும்தான் வருகிறது. நாடு சுதந்திரம் அடைந்து எழுபது ஆண்டுகளாகியும் திறந்தவெளியில் கழிவறையை பயன்படுத்தும் நிலை உள்ளது’’ என்று நீதிபதிகள்
இதனைத் தொடர்ந்து இந்த மனுவின் விசாரணையை வரும் நவம்பர் 22 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.