பல்கலை தமிழ்த்துறை ஆய்வு; ரூ.55.5 லட்சம் நிதி ஒதுக்கீடு
கோவை: பாரதியார் பல்கலை தமிழ்த்துறை சார்பில், ’கொங்கு நாட்டுப்புறவியல் அளவாய்வு’ என்ற தலைப்பில் ஆய்வு பணிக்கு பல்கலை மானியக்குழு, 55.5 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது.
பல்கலை மானியக்குழு சார்பில், ஒவ்வொரு ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை சிறப்பு நிதியுதவி திட்டத்தில், ஆய்வுக்கு நிதி ஒதுக்கி வருகிறது. அதன் படி, பாரதியார் பல்கலை தமிழ்த்துறைக்கு, கொங்குநாட்டு வரலாறுகளை ஆவணப்படுத்தும் வகையில், முதல்கட்டமாக, 2009-13 வரையிலான ஐந்தாண்டுகளுக்கு, 22.5 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியது.
தற்போது, இரண்டாம் கட்டமாக, 55.5 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிதியை பயன்படுத்தி, கொங்கு பகுதிகளுக்கான தாலாட்டு, ஒப்பாரி, கதை பாட்டு, நெடுபாட்டு, கூத்துக்கள், நாட்டுப்புற மருத்துவ முறை, திருமண நடைமுறை, விளையாட்டுகள், நாட்டுப்புற கதைகள் போன்றவற்றை ஆய்வு செய்து, ஆவணப்படுத்தவேண்டும். இரண்டாம் கட்ட ஆய்வுக்கு, 2019ம் ஆண்டு வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்த் துறைத்தலைவர் ஜெயா கூறுகையில், ”மேற்கத்திய நாடுகளில், அனைத்தும் ஆவணமாக பதிவு செய்யப்படும் பழக்கம் உள்ளது. ஆனால், நம் நாட்டில் ஆவணப்படுத்தும் வழக்கம் அதிகம் இல்லை. இதனால், இலக்கிய வரலாறுகள் படைப்பதில் சிரமம் எழுகிறது.
ஒவ்வொரு ஆவணமும் ஓர் பெரிய இலக்கிய வரலாற்றின் பகுதி. கொங்கு பகுதிகளுக்கு பல்வேறு சிறப்புகள் உள்ளன. நாட்டு மருத்துவம், விவசாயம் என, பழங்கால முறைகள் அனைத்தும் ஆவணப்படுத்தப்படும்,” என்றார்.