அனுமதியின்றி போராட்டம் : ஆசிரியர்கள் 'சஸ்பெண்ட்'
முன்னறிவிப்பின்றி போராட்டம் நடத்தியதாக, இரண்டு ஆசிரியர்களை, தொடக்க கல்வித் துறை, 'சஸ்பெண்ட்' செய்துள்ளது.
கோவை மாவட்டம், சூலுார் தொடக்க கல்வி அலுவலகத்தில், அக்., 28ல், 40க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், உயர் கல்விக்கான ஊக்க ஊதியம் கேட்டு, திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்குள்ள உதவி தொடக்க கல்வி அதிகாரி, பள்ளிகளில் நேரடி ஆய்வில் ஈடுபட்டிருந்த போது, இந்த போராட்டம் நடந்ததால், ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
தகவல் கிடைத்ததும், மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி காந்திமதி, சம்பவ இடத்துக்கு வந்து, ஆசிரியர்களிடம் பேச்சு நடத்தினார். அப்போது, 'பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள, ஊக்க ஊதிய பிரச்னைக்கு முடிவு காண வேண்டும்' என, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, முன்னறிவிப்பின்றி ஆசிரியர்கள் திடீரென போராட்டம் நடத்தியது குறித்து, தொடக்க கல்வி இயக்குனரகம் விசாரணை நடத்தியது. சூலுார் ஒன்றியம், கலங்கல் பஞ்சாயத்து ஒன்றிய தொடக்க பள்ளி தலைமை ஆசிரியை விஜயலட்சுமி, வெங்கிட்டாபுரம் பஞ்சாயத்து நடுநிலைப் பள்ளி ஆசிரியர் ஹென்றி பீட்டர் ஆகியோர், இந்த போராட்டத்துக்கு காரணம் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் இருவரும், அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக, சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.