கலை பாடங்களால் தேர்ச்சி விகிதம் சரிவு! சிறப்பு பயிற்சிக்கு ஏற்பாடு!
பொதுத்தேர்வு முடிவுகளில், அதிக தோல்வி விகிதத்தைச் சந்திக்கும் கலைப் பாடப் பிரிவுகளுக்கு, அரசுப் பள்ளிகளில் சிறப்பு பயிற்சி வகுப்பு துவக்க, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில்,
93 அரசு, அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. தனியார் பள்ளிகளை ஒப்பிடுகையில், அரசு பள்ளிகளில் தான், ஆண்டுதோறும் தேர்ச்சி விகிதம் குறைகிறது. தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க, நடப்பு கல்வியாண்டில், பல்வேறு புதிய திட்டங்கள் அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
பொதுத்தேர்வு எழுதும் பத்தாம், பிளஸ் 2 மாணவர்களுக்கு, முன் அரையாண்டு தேர்வு, வரும் 14ல் துவங்குகிறது. இதில் முழு பாடத்திட்டத்தில் இருந்தும், கேள்விகள் இடம்பெறும். அரையாண்டு தேர்வு முடிவுகளை ஆய்வு செய்து, கல்வியில் பின்தங்கிய மாணவர்களுக்கு, சிறப்பு வகுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதுதவிர, கடந்த ஐந்து ஆண்டு, பொதுத்தேர்வு முடிவுகளை ஆய்வு செய்ததில், கலைப் பாட பிரிவுகளில் தான், மாணவர்கள் பின்தங்கியிருப்பது தெரியவந்துள்ளது. இதற்கு, அரசுப்பள்ளிகளில், கலைப்பாட பிரிவு ஆசிரியர் பணியிடம் நிரப்பப்படாமல் இருப்பது முக்கிய காரணமாகும். காலிப்பணியிடத்தை நிரப்புவது குறித்து, பள்ளிக்கல்வித் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், பள்ளி வாரியாக, கலைப்பாட பிரிவுகளுக்கு, சிறப்பு பயிற்சி அளிக்க, ஆசிரியர் குழுக்களை உருவாக்கி கற்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, சமீபத்தில் நடந்த, தலைமையாசிரியர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அருள்முருகன் கூறியதாவது:
கலைப்பாட பிரிவில், கணிதம், வணிகவியல், பொருளாதாரம், கணக்கு பதிவியல், வரலாறு பாடங்களில் தான், அதிக மாணவர்கள் தோல்வியை தழுவுகின்றனர். அரையாண்டு தேர்வு முடிவுகளில், பின்தங்கிய மாணவர்களை தரம்பிரித்து, சிறப்பு பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளோம்.
மாணவர்களின் எண்ணிக்கையை பொருத்து, குறிப்பிட்ட பள்ளிகளை, நோடல் மையமாக அறிவித்து, பின்தங்கிய மாணவர்களுக்கு, சிறப்பு பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளோம்.
சிறப்புப் பயிற்சி அளிக்க, சிறப்பாக பாடம் நடத்தும், ஆசிரியர்களை ஒருங்கிணைத்து, குழு உருவாக்கப்பட்டுள்ளது. பள்ளி வாரியாக மாணவர்களின் பட்டியல் தயாரித்து, பொதுத்தேர்வுக்கான முன்தயாரிப்பு பணிகள் துவங்கப்படும். இதன்மூலம், வரும் பொதுத்தேர்வில், தோல்வி விகிதம் குறையும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.