தமிழில் கையெழுத்து ஆசிரியர்களுக்கு கட்டாயம்
ஆசிரியர்கள் மற்றும் கல்வித் துறை அதிகாரிகள், தங்கள் பெயரையும், முன்னெழுத்தையும், கட்டாயம் தமிழில் எழுத வேண்டும்' என, பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார். அனைத்து பள்ளிகள் மற்றும் கல்வித் துறை அலுவலகங்களுக்கு, அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
கல்வித் துறையில், 1978ல் பிறப்பிக்கப்பட்ட அரசாணைப்படி, அனைத்து பணியாளர்களும், அலுவலக ஆவணங்களில், தமிழில் மட்டுமே கையெழுத்திடவேண்டும். தமிழ் வளர்ச்சித் துறை, 1998ல் பிறப்பித்த அரசாணைப்படி, 'இன்ஷியல்' என்ற முன்னெழுத்தையும், தமிழில் மட்டுமே எழுத வேண்டும்; இந்த உத்தரவை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நடவடிக்கை
இதுகுறித்து, பட்டதாரி ஆசிரியர் கழக நிர்வாகி, இளங்கோ கூறுகையில், ''தமிழில் மட்டுமே கையெழுத்திட வேண்டும் என்ற உத்தரவை வரவேற்கிறோம். அதேபோல், கல்வித் துறை, தமிழ் வளர்ச்சித் துறை உள்ளிட்ட அரசுத்துறை
கோப்புகளில், தமிழில் எழுத வேண்டும் என்ற உத்தரவு பின்பற்றப்படுகிறதா என்பதையும், ஆய்வு செய்ய வேண்டும். தமிழில் எழுதாதவர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.