மின்வாரிய எழுத்து தேர்வு 'கட் ஆப்' வெளியீடு
இளநிலை தணிக்கையாளர் உட்பட, மூன்று பதவிகளுக்கான, 'கட் ஆப்' மதிப்பெண்ணை, மின் வாரியம் வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு மின் வாரியம், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட, 2,175 காலி பணியிடங்களை நிரப்ப, எழுத்து தேர்வு நடத்தியுள்ளது. அதில், கள உதவியாளர், தொழில்நுட்ப உதவியாளர் தவிர்த்த மற்ற, 750 பணியிடங்களுக்கான மதிப்பெண் விபரத்தை, கடந்த மாதம் வெளியிட்டது.முதல் கட்டமாக, 25 'ஸ்டெனோ டைப்பிஸ்ட்' மற்றும், 25 இளநிலை தணிக்கையாளர், 50 உதவி வரைவாளர் பணியிடங்களுக்கு, நேர்முக தேர்வு நடத்த உள்ளது. ஒரு பதவிக்கு, ஐந்து பேர் என, நேர்முக தேர்வுக்கு அழைக்கப்பட உள்ளனர். மூன்று பதவிகளுக்கான நேர்முக தேர்வில் பங்கேற்க, 'கட் ஆப்' மதிப்பெண்ணை, மின் வாரியம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: தேர்வு எழுதிய நபர், இணையதளத்தில், தான் பெற்ற மதிப்பெண்ணை மட்டும் பார்க்க முடியும்; எவ்வளவு மதிப்பெண் பெற்றால், நேர்முக தேர்வில் பங்கேற்க முடியும் என்ற, 'கட் ஆப்' மதிப்பெண் விபரம், மூன்று பதவிகளுக்கு மட்டும் வெளியிடப்பட்டு உள்ளது. அதற்கு மேல் மதிப்பெண் எடுத்த தேர்வர்கள், அழைப்பு கடிதத்தை, இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நேர்முக தேர்வு தேதி, பின்னர் தெரிவிக்கப்படும். மற்ற பதவிக்கு, விரைவில் வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
தெரியவில்லை! : மின் வாரியம், தேர்வு தொடர்பான அனைத்து விபரங்களையும், 'டான்ஜெட்கோ' என்ற, தன் இணையளத்தில் வெளியிடுகிறது; ஆனால், 'கட் ஆப்' விபரத்தை, அதில் வெளியிடவில்லை. தேர்வுக்காக துவங்கிய தனி இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. இதனால், தேர்வர்களால், அந்த விபரத்தை தெரிந்து கொள்ள முடியவில்லை.