பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்ற நவ.24 அவகாசம் நீட்டிப்பு!!!
பழைய ரூ.500, 1000 நோட்டுக்களை அரசு அறிவித்துள்ள இடங்களில் பயன்படுத்திக் கொள்வதற்கான கால அவகாசம் நவம்பர் 24ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ரூ.500, 1000 நோட்டுக்களை
அரசு மருத்துவமனைகள், பெட்ரோல் பங்க்குகள், டோல்கேட்கள் உள்ளிட்ட இடங்களில் பயன்படுத்திக்கொள்வதற்கான அவகாசம் 2வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இதே போன்று வங்கிகளில் இருந்து எடுப்பதற்கான தொகையின் அளவும் அதிகப்படுத்தப்பட்டுள்ளது.
புதிய 500 ரூபாய் நோட்டுக்கள் அறிமுகம்:
* புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ரூ.500 நோட்டுக்களை மத்திய அரசு நேற்று (நவ.,13) அறிமுகம் செய்தது. இந்த நோட்டுக்கள் புழக்கத்திற்கு வந்த பிறகு வங்கிகளில் ஏற்பட்டுள்ள பண தட்டுப்பாடு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
* ஏடிஎம்.,களில் நாள்தோறும் எடுத்துக் கொள்ளும் தொகையின் அளவு ரூ.2000 லிருந்து ரூ.2500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதே போன்று பழைய நோட்டுக்களை மாற்றிக் கொள்வதற்கான அளவும் ரூ.4000 லிருந்து ரூ.4500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
வாரத்திற்கு வங்கிகளில் இருந்து எடுத்துக் கொள்ளும் பணத்தின் அளவையும் ரூ.20,000 லிருந்து ரூ.24,000 ஆக உயர்த்துமாறு மத்திய அரசை வங்கிகள் கேட்டுள்ளன. பழைய நோட்டுக்களை மாற்றிக் கொள்வதற்கு மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுதிறனாளிகளுக்கு வங்கிகளில் தனி வரிசை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
* கறுப்பு பணம் மற்றும் வரிஏய்ப்பை ஒழிப்பதற்காக ரூ.500, 1000 நோட்டுக்களை வாபஸ் பெற்ற விவகாரம் தொடர்பாக நேற்று நள்ளிரவில் பிரதமர் மோடி, அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, ரிசர்வ் வங்கி துணை கவர்னர் உள்ளிட்டோரும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
* வாபஸ் பெறப்பட்ட பழைய நோட்டுக்களை மாற்றி கொள்வதற்கும், அதற்கு இணையான தொகையை பெற்றுக் கொள்வதற்கும் டிசம்பர் 30ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டிருந்த போதிலும் கடந்த வாரம் வங்கிகள் மற்றும் ஏடிஎம்., முன் நீண்டவரிசையில் மக்கள் காத்திருந்தனர். 80 சதவீதத்திற்கும் அதிகமாக புழக்கத்தில் இருந்த ரூ.500, 1000 நோட்டுக்களை வாபஸ் பெறுவதன் மூலம் பலரும் கையில் பணம் இல்லாமல் தவித்து வந்தனர்.
* நாடு முழுவதும் சுமார் 2 லட்சம் ஏடிஎம்.,கள் உள்ளன. ஆனால் 60 சதவீதம் ஏடிஎம்.,களில் மட்டுமே பணம் எடுக்க முடிகிறது. பலவற்றில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ரூ.2000 நோட்டுகளுக்கு ஏற்றவாறு இயந்திரங்கள் மாற்றி அமைக்கப்பட்டு வருகின்றன.
* ஒரே நபர் மீண்டும் மீண்டும் பணம் எடுக்க வேண்டாம் என ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டது. நேற்று மாலை வரை எஸ்பிஐ.,யில் மட்டும் ரூ.75,945 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.
* கோவாவில் நேற்று பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, ஊழலுக்கு எதிராக போராடவே நாட்டு மக்கள் என்னை தேர்ந்தெடுத்துள்ளார்கள். அதற்காக உயிருக்கு ஆபத்தான சூழலையும் எதிர்கொள்ள தயாராக உள்ளேன் என்றார். எனக்கு எதிராக சக்திகளை பிரயோகிப்பார்கள். என்னை அவர்கள் வாழ விட மாட்டார்கள் என எனக்கு தெரியும். அவர்கள் என்னை அழிக்கவும் நினைக்கலாம். ஏனெனில் 70 ஆண்டுகளாக கொள்ளையடித்த அவர்களுக்கு பிரச்னை ஏற்பட்டுள்ளது. ஆனால் நான் எதற்கும் தயாராக உள்ளேன் என உணர்ச்சி பூர்வமாக பேசினார்.
* ரூபாய் நோட்டுக்கள் தடை செய்யப்பட்டதை எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன. காங்., அரவிந்த் கெஜ்ரிவால் போன்றோர், பிரதமர் மோடி சாமானிய மக்களை துன்புறுத்துவதாக தெரிவித்தனர். ரூபாய் நோட்டுக்கள் தடை செய்யப்பட்ட விவகாரத்தை பார்லி.,யில் எழுப்புவது தொடர்பாக காங்கிரஸ், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆகியன இன்று கூடி ஆலோசிக்க உள்ளன. இது தொடர்பாக சிபிஎம்., கட்சியின் சீத்தாராம் யெச்சூரியிடமும் மம்தா நேற்று பேசி உள்ளார்.
* ஆனால் நிபுணர்கள் மத்திய அரசின் இந்த நடவடிக்கையை வரவேற்றுள்ளனர். மக்கள் இதனால் சிறிது காலம் கஷ்டப்படுவார்கள், புதிய நோட்டுக்கள் முழுமையாக புழக்கத்திற்கு வந்து விட்டால் இந்த கஷ்டங்கள் சரியாகி விடும் என தெரிவித்துள்ளனர். அதே சமயம் ஜிடிபி.,யை நீண்ட காலம் இந்த செயல்திட்டம் ஊக்குவிக்கும் என தெரிவித்துள்ளனர்.