குழந்தைகள் கல்வி: பெற்றோர் செய்ய வேண்டியவையும் செய்யக் கூடாதவையும்!
படிப்பு, மதிப்பெண், ஸ்கூல், தேர்வு... இவைதான் பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடம் தினமும் தவறாமல் பயன்படுத்தும் வார்த்தைகள். வாழ்க்கைக்கு வெறும் பள்ளி, தேர்வு சார்ந்த விஷயங்கள் மட்டுமே பிரதானம் என்ற
கண்ணோட்டத்திலேயே பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடம் கல்வி சார்ந்த விஷயங்களை கூறுகின்றனர்.
இதனால் படிப்பு, மதிப்பெண் போன்ற வார்த்தைகளை பெரும்பாலான மாணவர்கள் கசப்பாகவே நினைக்கின்றனர். இதுவே பெற்றோர் - பிள்ளை உறவினில் சுமூகமான சூழலை சீர்குலைக்கிறது.
''படிப்பும் மதிப்பெண்களும் அவசியம்தான். ஆனால் அதுமட்டுமே வாழ்க்கையைத் தீர்மானித்துவிடாது. இன்றைய பெற்றோர் - குழந்தைகள் உறவில் அதீத பிரச்னைகளை ஏற்படுத்தும் பிள்ளைகளின் படிப்பு, மதிப்பெண் சார்ந்த விஷயங்களில் உண்மையான சிக்கல்களை பெற்றோர்கள் கண்டறிந்து, அதற்கான தீர்வுகளை காண வேண்டும்'' எனக் கூறும் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, இப்பிரச்னை குறித்த பல்வேறு ஆலோசனைகளையும் கூறுகிறார்.
* ''ஒவ்வொரு மாணவ/மாணவிக்கும் திறன் அளவு மாறுபடும். அவர்களின் திறனையும் தாண்டி அதிக மதிப்பெண்கள் எடுக்கச் சொன்னால், அவர்களால் என்ன செய்ய முடியும்? மனஉளைச்சலுக்கு ஆளாகி, சமயங்களில் தவறான முடிவுகளைக்கூட எடுக்கத் தோன்றும். அதற்குப் பெற்றோர்களும், பள்ளிகளும்தான் பொறுப்பேற்க வேண்டும். தங்கள் பிள்ளை குறைவான மதிப்பெண் எடுத்தாலோ, அல்லது தேர்வில் தோல்வியடைந்தாலோ அவர்கள் அந்தச் சூழலை எதிர்கொள்ள பெற்றோர்தான் தன்னம்பிக்கை தரவேண்டும்.
* கிரிக்கெட்டில் பல உலக சாதனைகளைப் படைத்த சச்சின் டெண்டுல்கரே, பல முறை டக் அவுட் ஆகியிருக்கிறார். பல தோல்விகளைக் கடந்துதான் இன்று உலகம் புகழும் விளையாட்டு வீரராகச் சாதித்திருக்கிறார். அதோடு விஞ்ஞானிகள், மருத்துவர்கள், கல்வியாளர்கள் என பள்ளி, கல்லூரித் தேர்வுகளில் தோல்வியடைந்தவர்கள்தான் பின்னாளில் வெற்றியாளர்களாக உருவெடுத்திருக்கிறார்கள். அதனால், தேர்வுகளில் பெறும் மதிப்பெண்கள் மட்டுமே வாழ்க்கையைத் தீர்மானிக்காது என பெற்றோர்கள் புரிந்துகொள்வதுடன், அதைப் பிள்ளைகளுக்கும் சொல்லி, அவர்கள் தேர்வில் குறைவாக மதிப்பெண் எடுத்தால் அடுத்த தேர்வில் அதிக மதிப்பெண் பெற அவர்களை ஆயத்தப்படுத்த வேண்டும்.
* ஒவ்வொரு கல்வியாண்டிலும் துவக்கத்தில் இருந்தே பெற்றோர் தங்கள் பிள்ளைகளிடம் அன்போடு பேசி, அவர்களுக்குக் கல்வியில் ஆர்வம் வரும்படிச் செய்ய வேண்டும். மேலும் முதல் டெர்ம், காலாண்டுத் தேர்வு போன்ற ஆரம்பகட்ட தேர்வு சமயங்களில் மதிப்பெண் குறைவாக எடுத்தால், அப்போதே எதனால் மார்க் குறைந்தது, படிப்பதில் என்ன சிரமம் இருக்கிறது, படித்தது ஏன் மறந்து போகிறது என அவர்களுடன் பேசி தீர்வு காண வேண்டும். இது பிள்ளைகள் அடுத்தடுத்த தேர்வுகளை சிறப்பாக எதிர்கொள்ள வைக்கும்.
* பள்ளி முடிந்து வீட்டுக்கு வரும் பிள்ளையிடம் தினமும் குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி அன்றைய நிகழ்வுகள் குறித்து பெற்றோர் பேச வேண்டும். 'இன்னைக்கு புதுசா என்ன கத்துகிட்ட? பாடம் எல்லாம் புரிஞ்சுதா? அது எதனால புரியல?' எனக் கேட்டால், எதாச்சும் பிரச்னைகள் இருந்தால் பிள்ளைகளும் கூறுவார்கள். அத்துடன் மாணவர்களின் அறிவியல் சிந்தனைகளை வளர்க்கும் கேள்விகளைக் கேட்க வேண்டும். தங்களுக்குத் தெரிந்ததை பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுப்பதோடு, அவர்கள் வாயிலாக பெற்றோர்களும் பல விஷயங்களைத் தெரிந்துகொள்ளலாம். பிள்ளைகளிடம் நண்பர்களாக மனம்விட்டுப் பேசி, பழக வேண்டும். மாறாக, பள்ளி முடிந்து பிள்ளை வீட்டுக்குள் நுழைந்ததுமே, 'நாளைக்கு உனக்கு கணக்கு டெஸ்டாமே?' என பள்ளியில் இருந்து வந்திருந்த எஸ்.எம்.எஸ் தகவலை சொன்னால், பிள்ளைகளுக்கு கல்வி மீது வெறுப்புதான் வரும்.
* பிள்ளை ஒரு பாடத்தில் 50 மதிப்பெண் பெறுகிறார் எனில் அவரை 55, 60, 65 என படிப்படியாக அதிக மதிப்பெண் பெற ஊக்கப்படுத்தலாம். அதைவிடுத்து, 'அடுத்த தேர்வில் கட்டாயம் 80-90 மார்க் எடுத்தே ஆக வேண்டும்' எனச் சொன்னால் பிள்ளைகளுக்கு படிப்பின் மீது ஆர்வமின்மையும், மன அழுத்தமும்தான் அதிகமாகும். பாடங்களைப் புரிந்து படிக்கும் குழந்தைகள், 45 மதிப்பெண்கள் எடுத்தாலும் வாழ்வில் எப்படியும் முன்னேறிவிடுவார்கள், பிரச்னையான சூழல்களைத் தைரியமாக எதிர்கொள்ளவார்கள். ஆனால், மனப்பாடம் செய்து 90-100 மதிப்பெண்கள் எடுத்தாலும், அது எதிர்கால வேலைச்சூழலுக்கு உதவாது என்பதுடன், அவர்கள் சிறு பிரச்னையைக்கூட பெரிய பிரச்னையாக நினைத்து கவலைப்படுவார்கள்.
* 'நம் பிள்ளை குறைவான மதிப்பெண்கள் எடுத்தாலோ அல்லது தோல்வி அடைந்தாலோ சமூகத்தில் அவமானமாகிவிடும்' என்ற எண்ணம் வேண்டாம். இந்தச் சமூகம் நமக்கு சோறு போடப்போவதில்லை. ஆறுதல் கூறப்போவதில்லை. பல வருடம் பள்ளியில் படித்து ஒரு மாணவன் தோல்வி அடைந்தால் சம்பந்தப்பட்ட பள்ளியும், அரசும்தான் சரியாக செயல்படவில்லை என அர்த்தம். அதனால் அவர்கள்தான் தோல்விக்குப் பொறுப்பேற்க வேண்டும்.
* அரசுப் பணிக்கான போட்டித் தேர்வுகளை எழுத, பட்டம் பெற்றிருந்தால் போதும். எனவே, குழந்தைகளின் பள்ளி நாட்களில் மதிப்பெண் பந்தயத்தில் மட்டுமே குறியாக அவர்களை ஓடவைக்காமல், போட்டித் தேர்வுக்கான பயிற்சிகளுக்கு அவர்களை தயார்படுத்தலாம். உங்கள் பிள்ளைக்கு எதிர்கால ஆசை என்ன என்பதைத் தெரிந்துகொண்டு, அதற்கேற்ற படிப்பை படிக்க வையுங்கள்.
* படிப்பு பாதிக்கப்படும் என, உறவினர்கள் திருமணம், திருவிழா என எந்த நிகழ்ச்சிகளுக்கும் பிள்ளைகளை அழைத்துச் செல்லாமல் இருக்கும் பழக்கத்தை மாற்றுங்கள். உறவினர், நண்பர்களைச் சந்திப்பதும், இரண்டு நாட்கள் அவர்களுடன் சந்தோஷமாகக் கழிப்பதும், படிப்பு தரும் மனச்சுமையில் இருந்து அவர்களை மீட்கும், மனவளம் தரும். தொடர்ந்து வரும் நாட்களில், ஃப்ரெஷ் மைண்டுடன் படிப்பார்கள். எப்போதும் புரிந்துகொள்ளாமல் படித்துக்கொண்டே இருப்பதால், மனப்பாடத்திறமை மட்டும்தான் அதிகமாகும்; கல்வி அறிவு வளராது. தினமும் குழந்தைகளை குறிப்பிட்ட நேரம் விளையாடவிடுங்கள்.
தனியார் கோழிப்பண்ணை போன்ற சூழலை வீட்டிலும் ஏற்படுத்தாதீர்கள்.''