டாக்டர்களைபோலி கட்டுப்படுத்த தீவிரம் :நிபுணர் குழு அமைத்து அரசு உத்தரவு
சென்னை: போலி டாக்டர்களை கட்டுப்படுத்த, மாநில மற்றும் மாவட்ட அளவில், நிபுணர் குழு அமைத்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில், போலி டாக்டர்கள் சிகிச்சை அளிப்பதை தடுப்பது குறித்து, மருத்துவம் மற்றும் ஊரக சுகாதாரப் பணிகள், இயக்குனர் தலைமையில், ஜூன் 1ல், ஆலோசனை நடந்தது. இக்கூட்டத்தில், போலி டாக்டர்களை கண்டறிந்து, நடவடிக்கை எடுக்க,
மாநில அளவிலும், மாவட்ட அளவிலும், நிபுணர் குழு அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதை பரிசீலனை செய்த அரசு, மாநில மற்றும் மாவட்ட அளவில், நிபுணர் குழு அமைத்து, அரசாணை பிறப்பித்துள்ளது. இதன்படி, மாநில அளவிலான நிபுணர் குழு தலைவராக, மருத்துவம் மற்றும் ஊரக சுகாதாரப் பணிகள் இயக்குனரும், ஒருங்கிணைப்பாளராக, கூடுதல் இயக்குனரும் இருப்பர்.மருத்துவ கல்வி இயக்குனர், குடும்ப நல இயக்குனர், மருந்து கட்டுப்பாட்டு இயக்குனர் உட்பட, 12 பேர், உறுப்பினர்களாக இருப்பர். மாவட்ட நிபுணர் குழு தலைவராக மாவட்ட கலெக்டர், ஒருங்கிணைப்பாளராக சுகாதார பணிகள் இணை இயக்குனர் இருப்பர்.குடும்ப நல துணை இயக்குனர், போலீஸ் எஸ்.பி., உட்பட ஒன்பது பேர், குழு உறுப்பினர்களாக இருப்பர். இந்த குழுவில், ஆயுஷ் மருத்துவ நிபுணர், சித்தா மருத்துவ அலுவலரை சேர்த்துக் கொள்ளலாம்.மாநில அளவிலான குழு, மூன்று மாதங்களுக்கு ஒரு முறையும், மாவட்ட அளவிலான குழு, மாதம் ஒரு முறையும் கூடும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. போலி டாக்டர்களை கண்டறிந்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இக்குழு, அரசுக்கு பரிந்துரை அளிக்கும் என்பதால், போலி டாக்டர்கள் நடமாட்டம் குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.