சிறப்பான சாதனை புரிந்த 31 குழந்தைகளுக்கு ஜனாதிபதிவிருது !! தமிழ்நாட்டை சேர்ந்த 3 பேரும் விருது பெற்றனர்.
புதுடெல்லிபல்வேறு துறைகளில் சிறப்பான சாதனை புரிந்த 31 குழந்தைகளுக்கு ஜனாதிபதி விருது வழங்கினார். இதில் தமிழ்நாட்டை சேர்ந்த 3 குழந்தைகளும் அடங்குவர்.தங்க பதக்கம்
கல்வி, கலாசாரம், கலை, விளையாட்டு, இசை போன்ற துறைகளில் சிறப்பான சாதனை புரிந்த குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் குழந்தைகள் தினத்தையொட்டி ஜனாதிபதி விருதுகள் வழங்கி வருகிறார்.5 வயது முதல் 18 வயது வரையிலான குழந்தைகள் இந்த விருதுக்கு தகுதி உடையவர்கள் ஆவர். ஒரு குழந்தைக்கு தங்க பதக்கமும், சான்றிதழும், ரூ.20 ஆயிரத்துக்கான காசோலையும் வழங்கப்படும். மீதி 30 குழந்தைகளுக்கு வெள்ளி பதக்கமும், சான்றிதழும், ரூ.10 ஆயிரத்துக்கான காசோலையும் வழங்கப்படும்.ஜனாதிபதி வழங்கினார்
அதுபோல், இந்த ஆண்டும் 31 குழந்தைகள் இவ்விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். குழந்தைகள் தினத்தையொட்டி, நேற்று அவர்களுக்கு டெல்லியில் விருதுகள் வழங்கப்பட்டன. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி விருதுகளை வழங்கினார்.நிகழ்ச்சியில், மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மந்திரி மேனகா காந்தியும் கலந்து கொண்டார்.பாராஒலிம்பிக் வீராங்கனையான 16 வயது ரேவதி நாய்கா, விளையாட்டு துறையில் சிறப்பான சாதனை புரிந்ததற்காக, தங்க பதக்கம் பெற்றார். செஸ் விளையாட்டில் சாதனை புரிந்த 9 வயதான தேவ் ஷா, இவ்விருது பெற்ற மிக இளவயது குழந்தை ஆவார்.தமிழக குழந்தைகள்
விருது பெற்ற குழந்தைகளில், தமிழ்நாட்டை சேர்ந்த 3 குழந்தைகளும் அடங்குவர். டேபிள் டென்னிஸ் வீராங்கனை சி.ஆர்.ஹம்சவர்த்தினி, செஸ் வீராங்கனை ரக்ஷிதா ரவி, வேளாண் அறிவியல் மற்றும் என்ஜினீயரிங்கில் சிறப்பான சாதனை புரிந்த சிறுவன் சா.சிவசூர்யா ஆகியோர்தான் விருது பெற்ற தமிழக குழந்தைகள் ஆவர்.ஹம்சவர்த்தினி, 1998–ம் ஆண்டு நவம்பர் 10–ந் தேதி பிறந்தார். தனது 13–வது வயதில், மத்திய அமெரிக்காவில் நடைபெற்ற சர்வதேச டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்று தங்க பதக்கம் வென்றார். தற்போது, இந்தியாவில் முதல் இடத்தில் உள்ளார்.தெற்கு ஆசிய ஜூனியர் டேபிள் டென்னிஸ் போட்டியிலும், எல் சல்வடார், கவுதமலா ஆகிய நாடுகள் மற்றும் மும்பையில் நடந்த போட்டிகளிலும் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களை வென்றுள்ளார்.செஸ்
செஸ் வீராங்கனை ரக்ஷிதா ரவி, 2005–ம் ஆண்டு ஏப்ரல் 24–ந் தேதி பிறந்தவர். இவர், டெல்லியில் நடந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் வெண்கல பதக்கம் பெற்றுள்ளார். உலக இளைஞர் பிளிட்ஸ் செஸ் போட்டியில் வென்று உலக சாம்பியன் ஆனார். கிரீஸ் நாட்டில் நடைபெற்ற 10 வயதுக்கு உட்பட்டோருக்கான செஸ் போட்டியில் தங்க பதக்கம் பெற்றார்.சா.சிவசூர்யா, 2001–ம் ஆண்டு ஜூலை 24–ந் தேதி பிறந்தவர். இவர் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் முன்பு, ‘எரிமலை வெடிப்பு’ பற்றிய தனது கண்டுபிடிப்பை செய்து காட்டினார். விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்துறையில் அவரது கண்டுபிடிப்புக்காக தமிழக அரசிடம் முதல் பரிசு பெற்றார்.‘இளம் விஞ்ஞானி’, ‘வருங்கால கலாம்’ ஆகிய விருதுகளை பெற்றுள்ளார். ரஷிய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பால், 10 நாள் பயிற்சி வகுப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.