அரசு துறை சேவைகளை ஒருங்கிணைக்க 'ஆப்
அனைத்து அரசு துறை சேவைகளையும், ஒருங்கிணைக்கும் மொபைல், 'ஆப்'பை, 2017 மார்ச்சில், மத்திய அரசு அறிமுகம் செய்தது. பாஸ்போர்ட் சேவை, நிலம் தொடர்பான ஆவணப்பதிவுகள், வருமான வரி, இ - போஸ்ட், பெண்கள் பாதுகாப்பு, உதவித்தொகை உள்ளிட்ட, 200க்கும் மேற்பட்ட, மத்திய அரசு சேவைகளை ஒருங்கிணைக்கும் வகையில், மொபைல், 'மாஸ்டர் ஆப்'பை, அரசு தயாரித்து வருகிறது. இந்த, 'ஆப்' அடுத்தாண்டு மார்ச்சில் பயன்பாட்டுக்கு வரும்.
இந்த, 'ஆப்' உடன், எஸ்.எம்.எஸ்., சேவை, குரல் மூலம் பதிலளிக்கும் சேவையையும் இணைக்க, அரசு திட்டமிட்டு உள்ளது. 'டிஜிட்டல் இந்தியா' திட்டத்தின் கீழ் வெளியிடப்படும், இந்த, 'ஆப்'புக்கு, 'யுமாங்' என, பெயரிடப்பட்டு உள்ளது. வரும், 2019க்குள், 'யுமாங்' தளத்தின் கீழ், 200 'ஆப்'கள் உருவாக்கப்பட்டு, அவற்றின் மூலம், 1,200 வகை சேவைகள் அளிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இவற்றின் மூலம், தனியார் துறையின் சேவைகள் சிலவும் வழங்கப்படும். 'யுமாங்' ஆங்கிலம் மற்றும் உள்ளூர் மொழிகளில் கிடைக்கும்.
மின்னணுவியல் சேவை : மத்திய அரசு, 'இ - கவர்னன்ஸ்' எனப்படும், மின்னணுவியல் முறை நிர்வாக நடவடிக்கைகளின் கீழ், 'மைகவ்.இன்' என்ற இணையதளத்தை துவக்கி உள்ளது. அரசின் பல்வேறு கொள்கைகள் உருவாக்கலில், பொதுமக்கள் ஈடுபாட்டுடன் பங்கேற்க வேண்டும் என்ற நோக்கத்துடன், இந்த இணையதளம் செயல்படுகிறது. அதே போன்று, அரசின் மின்னணுவியல் சேவைகள் தொடர்பான, மக்களின் கருத்துக்களை பெறும் வகையில், அதிவிரைவு மதிப்பீடு முறை அடிப்படையில், மற்றொரு இணையதளத்தை உருவாக்க, அரசு திட்டமிட்டு உள்ளது.