2017-ம் ஆண்டில் 22 நாட்கள் அரசு விடுமுறை: தமிழக அரசு
அடுத்து வரும் 2017-ம்ஆண்டுக்கு 22 நாட்கள் அரசு விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக 6 அரசு விடுமுறை தினங்கள் திங்கட்கிழமைகளில் வருகின்றன.மத்திய
அரசின் செலாவணி முறிச்சட்டத்தின் படி, ஆண்டு தோறும் அரசு விடுமுறை தினங்களை, தமிழக அரசு அறிவிக்கிறது.இதன்படி இந்தாண்டுக்கான அரசு விடுமுறை தினங்கள் தொடர்பான அரசாணை திங்கட்கிழமை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழக ஆளுநர் சிஎச். வித்யாசாகர் ராவின் ஒப்புதல் பெற்று, தமிழக தலைமைச் செயலர் பி.ராமமோகன ராவ் இந்த அரசாணையை வெளியிட்டுள்ளார்.இதில் கூறியிருப்பதாவது: செலாவணி முறிச்சட்டத்தின் கீழ் மாநில அரசு அலுவலகங்களுக்கும், தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகள் உட்பட அனைத்து வணிக வங்கிகளுக்கும் வரும் 2017-ம் ஆண்டுக்கான பொது விடுமுறை தினங்கள் அறிவிக்கப்படுகின்றன. இதன் படி, ஏப்ரல் 1-ம் தேதி முழு ஆண்டு வங்கிக்கணக்கு முடிவு நீங்கலாக, அனைத்து சனிக்கிழமைக்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் அறிவிக்கப்பட்ட பாது விடுமுறை தினங்களில்அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அலுவலங்களும் மூடப்பட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வரும் 2017-ம் ஆண்டை பொறுத்தவரை, மேதினம் உள்ளிட்ட 6 விடுமுறை தினங்கள் திங்கட்கிழமைகளில் வருகின்றன. இதன் மூலம், சனி, ஞாயிறு, திங்கள் என தொடர் விடுமுறை 6 முறை வருகிறது.தமிழ்ப்புத்தாண்டு, விநாயகர் சதுர்த்தி, மிலாடிநபி ஆகியவை வெள்ளிக்கிழமைகளில் வருகிறது. அடுத்தடுத்த நாட்களும் விடுமுறை என்பதால், தொடர் விடுமுறை வருகிறது. இது தவிர, ஜனவரி மாதம் 14,15,16, செப்டம்பரில்29,30 மற்றும் அக்டோபர் 1,2 தேதிகள் தொடர் விடுமுறையாக வருகின்றன. இவை தவிர, 8 அரசு விடுமுறைகள், வழக்கமான விடுமுறையான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வருகிறது.