பிளஸ் 1, பிளஸ் டூ வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் ரெடி.. முதல்வர் அனுமதித்ததும் அமல்: அமைச்சர் தகவல்
தமிழகத்தில் 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான புதிய பாடத்திட்டம் தயாராக உள்ளது என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழகத்தில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான புதியப் பாடத் திட்டம் முதல்வர் ஜெயலலிதாவின் ஒப்புதலைப் பெற்றப் பின் அமலுக்கு வரும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
5 ஆண்டுகளுக்கு ஒரு முறை 11 மற்றும் 12ம் வகுப்பு பாடத்திட்டத்தை மாற்றுவது என்பது வழக்கம். ஆனால் தமிழகத்தில் கடந்த 2005ம் ஆண்டு 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பின்னர் 10 ஆண்டுகள் கடந்து இன்னும் புதியப் பாடத்திட்டத்தை தமிழக அரசு அமல் படுத்தாமல் இருக்கிறது.
தமிழகத்தைப் பொருத்தவரை மாணவ, மாணவியர்களின் தேர்ச்சி விகிதம் நன்றாக இருந்தாலும், ஐஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் படிப்பதற்கான நுழைவுத் தேர்வில் கூட தேர்ச்சி பெற முடியாத நிலையே நீடிக்கிறது. அந்த அளவிற்கு நமது பள்ளிக் கல்வியின் பாடத் திட்டங்கள் தரம் குறைவானதாக உள்ளன என்று ஏற்கனவே கல்வியாளர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், இன்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், 11 மற்றும் 12ம் வகுப்பிற்கான புதிய பாடத்திட்டம் தயாராக இருப்பதாக கூறியுள்ளார். மேலும் முதல்வர் ஜெயலலிதாவின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
புதிய பாடத்திட்டத்தை பொருத்தவரை, ஏற்கனவே உள்ள பாடத்திட்டத்தில் இருந்து பெரிய அளவில் மாற்றம் இருக்காது என்றும், இருப்பதில் இருந்து இன்னும் கொஞ்சம் மேன்மைபடுத்தி கொடுத்துள்ளோம் என்றும் அமைச்சர் தெரிவித்தார். மேலும் மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும் போது சிறப்பாக இருக்கும் என்றும் பாண்டியராஜன் கூறினார்