மாணவர்களுக்கு 11 விதிமுறைகளுடன் கல்வித்துறை அதிரடி உத்தரவு !
மாணவர்கள் முறுக்கு மீசை, காதில் கடுக்கன் அணிவது கூடாது. பிறந்த நாளானாலும் சீருடையில்தான் வரவேண்டும்’ என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கல்லூரி மாணவர்களை போலவே, மேல்நிலை பள்ளி மாணவர்களும் முறுக்கு மீசை, காதில் கடுக்கன்,
‘லோ ஹிப்’ பேன்ட், சீரற்ற முறையில் முடிவளர்த்து பள்ளிகளுக்கு வர ஆரம்பித்தனர். மேலும், பள்ளி நிர்வாகங்களுக்கு தெரியாமல் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்துகின்றனர். இதையடுத்து பள்ளிக்கு வரும் மாணவ, மாணவியர்கள் 11 விதிமுறைகளை கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும். முதன்மை கல்வி அலுவலர்கள் இதனை கண்காணிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
கல்வித்துறையின் 11 விதிமுறைகள்:
* காலை 9.15 மணிக்குள் பள்ளிக்கு வந்து சேர வேண்டும்.
* லோ ஹிப், டைட் பிட் ‘பேன்ட்’கள் அணிந்து வர அனுமதி இல்லை.
* அரைக்கை சட்டை மட்டுமே அணிய வேண்டும். சட்டையை இறுக்கமாக அணியக்கூடாது
* மாணவர்கள் அணியும் சட்டை நீளம் ‘டக் இன்’ செய்யும்போது வெளியில் வராத வகையில் இருக்க வேண்டும்.
* சீரற்ற முறையில் ‘இன்’ பண்ண கூடாது. கறுப்பு கலர் சிறிய ‘பக்கிள்’ கொண்ட பெல்ட் மட்டுமே அணிய வேண்டும்.
* கை, கால் நகங்கள், தலை முடி சரியான முறையில் வெட்டப்பட (போலீஸ் கட்டிங்) வேண்டும்.
* மேல் உதட்டை தாண்டாதவாறு மீசை இருப்பது அவசியம். முறுக்கு மீசை வைத்திருந்தால் கடும் நடவடிக்கை பாயும்.
* கைகளில் ரப்பர் பேண்டு, கயிறு, கம்மல், கடுக்கன், செயின் போன்றவற்றை அணிந்து வரக்கூடாது.
* பெற்றோர் கையொப்பத்துடன் வகுப்பாசிரியர் அனுமதி பெற்றுத்தான் விடுமுறை எடுக்க வேண்டும்.
* பைக், செல்போன், ஸ்மார்ட் போன் கொண்டு வர அனுமதி இல்லை. மீறினால் பறிமுதல் செய்யப்படும். திரும்ப ஒப்படைக்கப்பட மாட்டாது.
* பிறந்த நாள் என்றாலும் மாணவர்கள் சீருடையில் தான் பள்ளிக்கு வர வேண்டும்.
இவ்வாறு விதிகள் வகுக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து தலைமை ஆசிரியர் ஒருவர் கூறுகையில், ‘மாணவர்களின் ஒழுக்க நெறிமுறைகளை வளர்த்தெடுப்பதில் பள்ளிகள் பெரும்பங்கு வகிக்கின்றன. இதற்கான 11 விதிமுறைகள் குறித்து ‘பிளக்ஸ் பேனர்’கள் பள்ளிகளில் வைக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. துண்டு பிரசுரங்கள் மூலமும், பெற்றோரிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என்றார்.