தங்கத்துக்கு ஆசைப்படாத அரசுப்பள்ளியில் படிக்கும் அக்கா - தம்பி.
கள்ளக்குறிச்சி : கேட்பாரற்று கிடந்த, ஒரு சவரன் சங்கிலியை ஒப்படைத்த அரசுப் பள்ளியில் படிக்கும், அக்கா - தம்பியை பாராட்டி, எஸ்.பி., ஜெயகுமார் ஊக்கப்பரிசு வழங்கினார்.விழுப்புரம் மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த நத்தகாளியைச் சேர்ந்த தம்பதி சரவணன் - சரோஜா. இவர்களது மகள் ஜோதிகா,13, மகன் சதீஷ், 10. இருவரும், அருகிலுள்ள ஏமம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில், 8, 5ம் வகுப்பு படிக்கின்றனர். நேற்று முன்தினம் காலை, இருவரும் பள்ளிக்கு நடந்து சென்றபோது, சாலையில் கேட்பாரற்று கிடந்த, 1 சவரன் சங்கிலியை கண்டெடுத்து, பள்ளி தலைமை ஆசிரியர் செல்வகுமாரிடம் ஒப்படைத்தனர்.
அவர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருந்தார். அதன்படி, அதை தவறவிட்ட ஏமம் அடுத்த நெய்வனை கிராமத்தைச் சேர்ந்த மகேந்திரனிடம், உரிய விசாரணைக்குப் பின், ஒப்படைக்கப்பட்டது. ஏழ்மை நிலையிலும், நேர்மையாக செயல்பட்ட ஜோதிகா - சதீஷ் இருவரையும், பள்ளி தலைமை ஆசிரியர் செல்வகுமார் உட்பட பலரும் பாராட்டினர். தகவலறிந்த விழுப்புரம், எஸ்.பி., ஜெயகுமார், இருவரையும் கள்ளக்குறிச்சி போலீஸ் ஸ்டேஷனுக்கு நேற்று வரவழைத்தார். அங்கு, அவர்களுக்கு சால்வை அணிவித்து, ஊக்கப்பரிசு கொடுத்து பாராட்டினார்.