தேர்தல் பணிக்காக சென்ற அரசுப்பள்ளி ஆசிரியை மரணம்
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள சம்சிகாபுரத்தைச் சேர்ந்தவர் ஜெயவேல். இவரின் மனைவி சங்கரகோமதி. இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள அரசுப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பந்தல்குடி, வேலாயுதபுரத்தில் உள்ள பள்ளியில் தேர்தல் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. தேர்தல் பணிக்கு வருவதற்காக சங்கரகோமதி, தன் கணவர் ஜெயவேல் உடன் காரில் வந்துள்ளார். காரை ஜெயவேல் ஓட்டிவந்துள்ளார்.
கோவில்பட்டி அருகேயுள்ள வெம்பூர் பகுதிக்கு வந்துகொண்டிருக்கும்போது, காரை ஜெயவேல் தேசிய நெடுஞ்சாலையை நோக்கி ஓட்டியுள்ளார். அப்போது தூத்துக்குடியிலிருந்து மதுரை நோக்கிச் சென்ற காரும், ஆசிரியை வந்த காரும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்தில் ஆசிரியை சங்கரகோமதி பரிதாபமாக உயிரிழந்தார். ஜெயவேல் படுகாயம் அடைந்தார்.
இந்த விபத்து குறித்து மாசார்பட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். படுகாயமடைந்த ஜெயவேலுக்கு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தேர்தல் பணிக்காக வந்த ஆசிரியை, எதிர்பாராத விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.