இந்தப்பகுதி வாக்குப்பதிவு நாளில் ஒரு வாக்குச்சாவடி தலைமை அலுவலர் செய்ய வேண்டிய பணிகளை  பற்றி விளக்க இருக்கிறது.

இந்த நடைமுறைகள் சட்டப்பூர்வமானவை.

இதில் ஏதேனும் தவறுகள் நேர்ந்தால் தேர்தல் பாதிக்கப்படும், மறு தேர்தல் கூட நடத்திட உத்தரவிடப்படலாம் என்பதையும் தாண்டி கடுமையான தண்டனைக்கு ஆட்படுவோம் என்பதால் மிகுந்த கவணத்தோடு இப்பணிகளினை செய்திட வேண்டும்.

வாக்குப்பதிவு நேரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே வாக்குச்சாவடி முகவர்களை நாம் நியமனம் செய்திடவும் அவர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடத்திடவும் வேண்டும்.

வாக்குச்சாவடி முகவர்களை பொறுத்தவரையில் வேட்பாளர் ஒருவர் வாக்குச்சாவடியில் முகவராக  படிவம் 10ல் ஒருவரை நியமனம் செய்து வழங்கி இருப்பார்.

அவர் அந்த வாக்குச்சாவடியில் வாக்களிப்பவராகவோ அல்லது அந்த தொகுதியில் ஏதேனும் ஒரு வாக்குச்சாவடியில் வாக்களிக்க தகுதியானவராகவோ இருப்பது அவசியம்.

அவ்வாறு நியமிக்கப்பட்ட வாக்குச்சாவடி முகவர் ஒருவர் வாக்குச்சாவடி தலைமை அலுவலர் முன்பாக அறிவிப்பு  ஒன்றில் ஒப்பமிட வேண்டும்.

ஒவ்வொரு வேட்பாளருக்கும் ஒரு வாக்குச்சாவடி முகவரும் இரு  மாற்று வாக்குச்சாவடி முகவரும் நியமனம் செய்யப்படலாம்.

எனினும் ஒரு சமயத்தில் ஒரே ஒரு முகவர் மட்டுமே வாக்குச்சாவடியினுள் இருக்க இயலும்.

வாக்குச்சாவடியினுள் இருக்கும் முகவர் ஒருவர் உள்ளே இருந்து வாக்காளர் பட்டியலையோ அல்லது துண்டுச்சீட்டுகளையோ வெளியில் எடுத்துச்செல்ல அனுமதி இல்லை.

வாக்குச்சாவடியினுள் முகவர்கள் வாக்குச்சாவடியினுள் நுரையும் வாக்காளர் வெளியில் செல்லும் வரையிலான  நடைமுறைகளை பார்க்கும் வண்ணம் அமரவைக்கப்பட வேண்டும்.

உள்ளே அமரவைக்கப்படும் முகவர்கள் முதலில்

அங்கீகரிக்கப்பட்ட தேசிய அரசியல் கட்சியின் வேட்பாளர்கள்

மாநில கட்சிகளின் முகவர்கள்

பிற மாநிலங்களில் அங்கீகரிக்கப்பட்டு பொது சின்னத்தில் இந்த மாநிலத்தில் போட்டியிடும் கட்சிகளின் முகவர்கள்..

பதிவு செய்யப்பட்ட ஆனால் அங்கீகரிக்கப்படாத கட்சி  வேட்பாளரின் முகவர்கள்...

சுயேட்சை வேட்பாளர்கள் என அமரவைக்கப்பட வேண்டும்.

தேர்தல் பணியில் ஈடுபடும் முகவர்களை நியமிக்க கால அவகாசம் எதுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை ஆதலால் எந்த நேரத்திலும் முகவர் ஒருவர் நியமிக்கப்பட்டு நடவடிக்கைகளை தொடர அனுமதிக்கலாம்.

வாக்குச்சாவடி முகவர்கள் நியமனம் மிக முக்கியமானது.

தேர்தலின் ஒவ்வொரு பகுதியிலும் அவர்களின் பங்களிப்பு தேவைப்படும்..

*_தேர்தல் பணிகளை விரும்பிச் செய்வோம்.._*

*_தேர்தல் விதிகளை விளங்கச் சொல்வோம்.._*
..............................................................................................................................................................................................