அரசு பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் போர்டில் பாடங்கள்; கற்பிக்கும் ஆசிரியர் பயிற்றுனர்
ராமநாதபுரம் : அனைவருக்கும் கல்வி இயக்க ஆசிரியர் பயிற்றுனர் ஒருவர், தனது சொந்த செலவில் ஸ்மார்ட் போர்டு வாங்கி அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கற்பிக்கிறார்.
ராமநாதபுரம் மாவட்டம், தேவிப்பட்டினத்தை சேர்ந்தவர் உலகராஜ். அனைவருக்கும் கல்வி இயக்க ஆசிரியர் பயிற்றுனரான இவர், வில்லுப்பாட்டு, நாட்டுப்புற இசை மூலம் மாணவர்களை கவரும் வகையில் ஏற்கனவே பாடம் நடத்துவது குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்து வந்தார்.
தற்போது, தனியார் பள்ளிகளில் பயன்படுத்துவது போன்ற ஸ்மார்ட் போர்டு கல்வியை அரசுப்பள்ளி மாணவர்களுக்கும் வழங்கி வருகிறார். 'இன்ராக்டிவ்' என்ற கருவி மூலம், புரஜெக்டர் உதவியுடன் ஸ்மார்ட் போர்டு மூலம் பாடம் நடத்தி வருகிறார். இதில், பென் டிரைவ் பயன்படுத்தியும் பாடங்கள் நடத்தலாம்.
இதே முறையில் வேலுார் மாவட்டம் வாணியம்பாடியில் ஆசிரியர் அருண்குமார் மாணவர்களுக்கு கற்றுத் தருகிறார். இதை அறிந்த உலகராஜ் அவரிடம் சென்று இதனை கற்று வந்துள்ளார். இதற்காக ரூ.80 ஆயிரம் சொந்த செலவில், புரஜெக்டர், லேப்டாப் , இன்ட்ராக்டிவ் கருவி, ஸ்பீக்கர், ஸ்கிரீன் உள்ளிட்ட உபகரணங்கள் என வாங்கியுள்ளார்.
ஒவ்வொரு அரசுப் பள்ளிகளுக்கும் சென்று இந்த முறையில் மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்கிறார். ராமநாதபுரம் வள்ளல் பாரி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நேற்று ஸ்மார்ட் போர்டில் மாணவர்களுக்கு கற்றுக்கொடுத்தார். லேசர் பேனாவை மாணவர் கையில் கொடுத்து ஸ்கிரீனில் எழுதப்படும் ஆங்கில வார்த்தையை அப்படியே எழுத வேண்டும். அந்த மாணவர் சரியாக எழுதும் வரை கற்றுக்கொடுக்கப்படுகிறது.
இதனால், கூடுதல் பயிற்சி கிடைக்கும். சரியாக எழுதியதும் வாழ்த்துக்கள், சிறப்பு, நன்று, என அறிவிப்பு வருவதுடன், மத்தாப்பு கொளுத்துவது போல், கைதட்டல், கை கொடுப்பது, டாடா காட்டுவது போல் திரையில் வரும். இதை பார்த்து மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மாணவர்கள் எளிதல் உற்சாகத்துடனும், கற்றலில் ஈடுபாட்டுடன் கல்வி கற்க முடிகிறது, என்றார் உலகராஜ்.