மாணவர்களை பள்ளிக்கு அழைத்துவர சொந்த காசை செலவிடும் ஆசிரியர்கள்
இதுகுறித்து, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் வேல்முருகன் கூறியதாவது: மூன்று குக்கிராமங்களை சேர்ந்த மாணவ - மாணவியர், போதிய போக்குவரத்து வசதியில்லா காரணத்தால், துாரம் அதிகமாக உள்ளதால், பள்ளிக்கு வர சிரமப்பட்டனர். பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில், ஆசிரியர்கள் பால்ராஜ், கோமதி உள்ளிட்ட ஆசிரியர்கள் ஒத்துழைப்புடன், நடப்பாண்டு வேன் ஏற்பாடு செய்து, தினமும், 60க்கும் மேற்பட்ட மாணவர்களை, கிராமங்களிலிருந்து பள்ளிக்கு அழைத்து வருகிறோம். மாலையில், வீடுகளுக்கு அனுப்பிவைக்கிறோம். இதற்காக, வாரந்தோறும், 4,000 ரூபாய் வரை செலவாகிறது. அதற்கான தொகை, ஆசிரியர் கழகம் மற்றும் ஆசிரியர்கள் மூலம் வழங்கப்படுகிறது.இதனால், கடந்தாண்டு, 200 ஆக இருந்த மாணவர்களின் எண்ணிக்கை, நடப்பாண்டு, 230 ஆக அதிகரித்துள்ளது. கடந்தாண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வில், 98 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். நடப்பாண்டு, 100 சதவீத மாணவர்களை தேர்ச்சியடைய வைப்பதே நோக்கம்.இவ்வாறு அவர் கூறினார்.
விரைவில் பஸ் இயக்க எம்.எல்.ஏ., நினைப்பாரா? : ஆசிரியர்கள் கூறியதாவது:மாணவர்களை, எங்கள் பள்ளியில் சேர்க்க, கிராமங்களுக்கு சென்றபோது, பஸ் வசதியில்லாததால், வர முடியவில்லை என்றனர். அதனால், மேட்டூர், எம்.எல்.ஏ., செம்மலையை சந்தித்து, பள்ளிப்பட்டியிலிருந்து, சந்தைதானம்பட்டி வழியாக, டவுன் பஸ் இயக்க, கோரிக்கை விடுத்தோம். அவர், நடவடிக்கை எடுப்பதாக கூறினார். அதன்படி, பஸ் இயக்கப்படும் வரை, மாணவ - மாணவியரை, வேனில் அழைத்துவர முடிவு செய்துள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.