உறுதி! வதந்திகள் பரவுவதை தடுக்க, 'வாட்ஸ் ஆப்' ... தகுந்த மாறுதல் செய்யப்போவதாகவும் அறிவிப்பு
புதுடில்லி: 'வாட்ஸ் ஆப்' தகவல் தொடர்பு தளத்தை தவறாக பயன்படுத்துவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை,தேர்தல்கள் நடப்பதற்கு முன் மேற்கொள்வதாக உறுதி அளித்துள்ள, அந்த நிறுவனம், 'போலி தகவல் களை சரிபார்த்து பகிரும் வகையில், வாட்ஸ் ஆப்பில் தக்க மாற்றங்கள் செய்யப்படும்' என்று, கூறியுள்ளது.
வதந்திகள், பரவுவதை,தடுப்பதாக,வாட்ஸ் ஆப், நிறுவனம்,உறுதி,தகுந்த, மாறுதல்களை, செய்யப்போவதாகவும், அறிவிப்பு
நாட்டின் பல்வேறு பகுதிகளில், மாட்டிறைச்சி வைத்திருந்ததாகவும், பசுக்களை கொன்றதாக வும் குற்றஞ்சாட்டி, உள்ளூர்வாசிகள் கும்பலாக திரண்டு தாக்குதல் நடத்தியதில், பலர் உயிர் இழந்து உள்ளனர்.அதேபோல், சமீப காலமாக, குழந்தைகளை கடத்த வந்துள்ளதாக சந்தேகத்தில், அப்பாவிகள் பலர், விஷமக் கும்பல்களால் அடித்துக் கொல்லப்பட்டனர்.
அதிர்வலைகள்
மஹாராஷ்டிராவில் ஐந்து பேர், தமிழகத்தில் ஒருவர், கர்நாடகாவில் ஒருவர், என, குழந்தைகளை திருட வந்ததாக, சந்தேகத்தில் பலர் அடித்துக்கொல்லபட்டது,நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.இந்த சம்பவங்களை விசாரித்த போலீசார், பெரும்பாலான சந்தர்ப்பங்களில், இதுபோன்ற தாக்குதல்களின் பின்னணியில், வாட்ஸ் ஆப் மூலம் பரப்பப்பட்ட வதந்திகள் காரணமாக இருப்பதை அறிந்தனர். இதையடுத்து, வாட்ஸ் ஆப் தகவல் தொடர்பு தளத்தில், வதந்திகள் பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி, அந்த நிறுவனத்துக்கு, மத்திய அரசு உத்தரவிட்டது.
இந்நிலையில், வாட்ஸ் ஆப் நிறுவன செய்தி தொடர்பாளர்,இ - மெயிலில் அளித்துள்ள பதில்:
அடுத்தாண்டு துவக்கத்தில், இந்தியாவில் பல தேர்தல்கள் நடக்க உள்ளன.அதற்கு முன், வாட்ஸ் ஆப்பை தவறாக பயன்படுத்துவதை தடுப்பது குறித்து, தேர்தல் ஆணையத்துடனும், அரசியல் கட்சி ஒருங்கிணைப்பாளர்களுடனும், வாட்ஸ் ஆப் நிர்வாகிகள் பேசினர்.வாட்ஸ் ஆப் என்பது, தனிப் பட்ட மற்றும் சிறு குழுக்கள் இடையே, தகவல்களை பரிமாறிக் கொள்வதற்காக உருவாக்கப்பட்டது.
மாற்றங்கள்
எங்கள் தகவல் தொடர்பு தளத்தை தவறாக பயன்படுத்துவோரை தடை செய்வதிலும், பொய் செய்திகளை பரப்புவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்பதிலும் உறுதியாக உள்ளோம். வாட்ஸ் ஆப் தகவல் தொடர்பு தளத்தை தவறாக பயன்படுத்துவதை தடுப்பதற்கான நடவடிக்கைகள், தேர்தல்கள் நடப்பதற்கு முன் எடுக்கப்படும்.போலி தகவல்களை, வதந்திகளை சரிபார்த்து பகிரும் வகையில், வாட்ஸ் ஆப்பில் தக்க மாற்றங்கள் செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
வருகிறது, 'வெரிபிகடோ'
வட அமெரிக்காவில் உள்ள மெக்சிகோ, தென் அமெரிக்க நாடான பிரேசில் ஆகியவற்றில், சமீபத்தில் தேர்தல்கள் நடந்தன. அப்போது, வதந்திகள், தவறான தகவல்கள் பரப்பப்படுவதை தடுக்கும் வகையில், 'வெரிபிகடோ' என்ற, தகவல் உறுதி செய்யும் வசதி, வாட்ஸ் ஆப்பில் சேர்க்கப்பட்டது.பொய் தகவல்களுக்கு எதிராக, இந்தியாவில் எதிர்ப்புகள் வலுத்து வருவதால், இந்தியாவில் பயன்படுத்தப்படும், வாட்ஸ் ஆப்பிலும், வெரிபிகடோ வசதி சேர்க்கப்படும் எனத் தெரிகிறது. இதற்கிடையே, இந்தியாவில், 'சாட்' எனப்படும், குறுந்தகவல்களை, ஒரு தடவையில், ஐந்துக்கு மேல் அனுப்புவதற்கு, வாட்ஸ் ஆப் கட்டுப்பாடு விதித்துள்ளது.வெளிநாடுகளில், இந்த கட்டுப்பாடு, 20சாட்களாக உள்ளது. தவிர, வாட்ஸ் ஆப்பில், விரைவாக, 'பார்வேர்டு' செய்வதற்கான பட்டனை அகற்றுவது குறித்தும், வாட்ஸ் ஆப் நிறுவனம் ஆலோசித்து வருகிறது.
உ.பி.,யில் ‛டிஜிட்டல் ஆர்மி'
உ. பி மாநிலத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. சமீபத்தில், 'வாட்ஸ் ஆப்'பில் பரவிய வதந்தியை நம்பி, நாடு முழுவதும் பலர், பொதுமக்களால் அடித்துக் கொல்லப் பட்டனர்.இதையடுத்து, 'சமூக வலைதளங் களில் வதந்தி பரப்புவோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, மத்திய அரசு அறிவித்தது. இது தொடர்பாக உரிய நடவடிக்கைகளை எடுக்கும்படி, மத்திய அரசுக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலத்தில், சமூக வலைதளங்களில் பரவும் வதந்தியை கண்டுபிடிக்க, 'டிஜிட்டல் ஆர்மி' என்ற அமைப்பை, போலீசார் துவக்கி உள்ளனர்.இது குறித்து, உ.பி., மாநில, டி.ஜி.பி., - ஓ.பி.சிங் கூறியதாவது:சமீபகாலமாக, சமூக வலைதளங்களில் பரவிய வதந்தியை நம்பி, ஏராளமானோர் அடித்துக் கொல்லப்பட்டனர். இதனால், நாடு முழுவதும் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டது. இதையடுத்து, சமூக வலைதளங்களில் பரவும் வதந்தியை கண்டுபிடிக்க, டிஜிட்டல் ஆர்மி என்ற அமைப்பு துவக்கப்பட்டு உள்ளது; இதில், 3.67 லட்சம் தன்னார்வலர்கள் பணியில் அமர்த்தப்படுவர். ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனுக்கும், ஒரு, 'வாட்ஸ் ஆப்' குரூப் உருவாக்கப்பட்டு, மாவட்ட அதிகாரிகளுடன், அந்த குழு இணைக்கப்படும்; இது, டி.ஜி.பி., அலுவலகத்தில் இருந்து கண் காணிக்கப்படும்.இதன் மூலம், சமூக வலை தளங்களில் வதந்தி பரப்புவது தடுக்கப் படும். மேலும், வதந்தி பரப்புவோரை எளிதாக கைது செய்ய முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.