உயர்கல்வி கற்றல் மையம் விண்ணப்பிக்க அவகாசம்
கோவை:பாரதியார் பல்கலையில்புதிதாக அறிமுகப்படுத்தப்படவுள்ள, உயர்கல்வி கற்றல் மையங்களை துவக்குவதற்கான விருப்ப விண்ணப்பங்களை சமர்ப்பிக்க, கல்லுாரிகளுக்கு, இம்மாதம், 31 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
பல்கலையில் தொலைதுார கல்வி முறையில் எழுந்த சிக்கல் காரணமாக, தமிழக எல்லைதாண்டியும், எல்லைக்குள்ளும் செயல்பட்டு வந்த, 500க்கும் மேற்பட்ட தனியார் தொலைதுார கல்வி மையங்கள் மூடப்பட்டு, மாணவர்கள் சேர்க்கை நிறுத்தப்பட்டுள்ளது.
தற்போது, முறைகேடுகள் களையப்பட்டு, பல்கலையின் நேரடி கண்காணிப்பில், உயர்கல்வி கற்றல் மையங்கள், கல்லுாரிகளில் துவக்கப்படவுள்ளன. இதற்கான முதல்கட்ட பணிகள் நடந்து வருகின்றன.உயர்கல்வி மையங்களை நடத்த ஆர்வமுள்ள கல்லுாரிகள் விருப்பம் தெரிவிக்க, ஜூன், 18 வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.
இதில், 27 கல்லுாரிகள் மட்டுமே விருப்பம் தெரிவித்த நிலையில், மீண்டும் கால அவகாசம் நீடித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் படி, இம்மாதம், 31ம் தேதி வரை விருப்பம் தெரிவிப்பதற்கான விண்ணப்பங்களை கல்லுாரிகள், பல்கலையில் சமர்ப்பிக்கலாம்.