பேராசிரியர் தேர்வு வாரியம் (PRB) அமைக்க திட்டம்:உயர் கல்வித் துறை அமைச்சர் அன்பழகன்
பல்கலை மற்றும் கல்லுாரி பேராசிரியர்கள் நியமனத்திற்காக, பி.ஆர்.பி., என்ற பேராசிரியர் தேர்வு வாரியம் அமைக்க, அரசு திட்டமிட்டுள்ளதாக, உயர் கல்வித்துறை அமைச்சர், கே.பி.அன்பழகன் கூறினார்.
தமிழக அரசு பள்ளிகள் மற்றும் கல்லுாரிகளில், ஆசிரியர்,பேராசிரியர்கள் மற்றும் பணியாளர் காலியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., உள்ளது. இந்த வாரியத்தில், பள்ளிக் கல்வித் துறையினர் மட்டுமேஇருப்பதால், உயர் கல்வித்துறை பணி நியமனங்களை மேற்கொள்ள, தனி அமைப்பை உருவாக்க வேண்டும் என, நீண்ட நாட்களாக வலியுறுத்தப்பட்டு வந்தது.இந்நிலையில், பேராசிரியர்களை தேர்வு செய்வதற்கு, தனி அமைப்பை உருவாக்க, உயர் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து, உயர் கல்வித்துறை அமைச்சர், அன்பழகன் அளித்த பேட்டி:டி.ஆர்.பி., நடத்திய, பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில், தவறு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வரும் காலங்களில், புதிய பணியிடங்களை நிரப்ப, புதிய திட்டங்களை யோசித்து வருகிறோம். பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளின் பேராசிரியர்களை தேர்வு செய்ய, தனியாக தேர்வு வாரியம் அமைக்கலாமா என, பரிசீலித்து வருகிறோம்; இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை.
தற்போதைய சூழலில், ஆசிரியர்கள்பற்றாக்குறையை போக்க, அண்ணா பல்கலையில் இருந்து, உபரி பேராசிரியர்களை, அரசு இன்ஜினியரிங், பாலிடெக்னிக் மற்றும் கலை கல்லுாரிகளுக்கு மாற்றி வருகிறோம். மேலும், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் காலியாக உள்ள, 2,640 பணியிடங்களை, விரைவில் நிரப்ப திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.