மானிய ஸ்கூட்டி திட்டம் இன்று (24.02.2018) தொடக்கம்!
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி
சென்னை கலைவாணர் அரங்கில் நாளைக் காலை அம்மா ஸ்கூட்டி திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்.
பணிக்குச் செல்லும் பெண்களுக்கான ஸ்கூட்டி மானியத் திட்டத்திற்குத் தமிழகம் முழுவதும் ஜனவரி மாதம் முதல் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு சுமார் 3 லட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் வந்து சேர்ந்தன. சென்னையில் மட்டும் 1 லட்சம் விண்ணப்பங்கள் வந்த நிலையில் அதிலிருந்து முதல் கட்டமாகத் தற்போது 1000 விண்ணப்பங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது.
சென்னையில் நாளை மாலை 5.30 மணிக்குக் கலைவாணர் அரங்கத்தில் தமிழக அரசு சார்பில் `அம்மா ஸ்கூட்டி திட்டம்' தொடக்க விழா நடக்கிறது. இதில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பயனாளிகளுக்கு ஸ்கூட்டி மானியம் வழங்கி இந்தத் திட்டத்தைத் தொடங்கிவைக்கிறார். இந்த விழாவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்குகிறார். துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் விழாவில் கலந்துகொள்கிறார்கள்.
தற்போது 1000 ஸ்கூட்டிகளும் கலைவாணர் அரங்கத்தின் பின்புறத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. ஸ்கூட்டி மானிய திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகள் அனைவருக்கும் இன்று தகவல் தெரிவிக்கப்பட்டது. நாளை பிரதமர் மோடியிடமிருந்து பயனாளிகள் ரூ.25 ஆயிரம் மானியம் பெற்றுக்கொண்ட பின்னர் ஸ்கூட்டியை எடுத்துச் செல்வார்கள். மோடியை வரவேற்கும் விதமாக கலைவாணர் அரங்கத்தின் இருபுறமும் வரவேற்பு வாசகங்கள் அடங்கிய பேனர்கள் வைக்கப்பட்டுவருகின்றன. பிரதமர் வருகையையொட்டி சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.