Wednesday, 30 August 2017
மருத்துவர்கள் சண்டையால் குழந்தை பலி!!
மருத்துவர்களின் சண்டையால் அறுவை சிகிச்சையின்போது பச்சிளம் குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் கர்ப்பிணிப் பெண் ஒருவருக்குப் பிரசவ வலி ஏற்பட்டு உமைத் மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து அறுவை சிகிச்சைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அந்தப் பெண் ஆப்ரேஷன் டேபிளில் காத்திருந்தபோது மருத்துவர்கள் இருவர் சண்டையிட்டுள்ளனர். இதில், மகப்பேறு மருத்துவர் அசோக் நயின்வால், பெண் உணவு சாப்பிட்டாரா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு மற்றொரு மருத்துவர் எம்.எல்.தாக் முதலில் நீங்க பரிசோதனை செய்யுங்கள் என்று கூறியுள்ளார்.
இதுபோன்று இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சண்டை போட்டுள்ளனர். கிட்டத்திட்ட ஆப்ரேஷன் தியேட்டரில் 30 நிமிடங்கள் சண்டை போட்ட கால தாமதத்தால் குழந்தை இறந்து பிறந்துள்ளது. இதை மருத்துவமனையில் பணிபுரிந்த மற்றொரு மருத்துவர் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவிவருகிறது.
இதைத் தொடர்ந்து, அசோக் நைன்வால், எம்.எல் தாக் இருவரும் உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட்டனர். “அவர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்" என்று உமாத் மருத்துவமனையின் முதன்மை நிர்வாகி பாட் கூறியுள்ளார்.
இது குறித்து ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளது