நீட் தேர்வுக்கு எதிராகப் போராட்டம் நடத்தி வரும் அரசுப் பள்ளி மாணவிகளைக் காலாண்டுத் தேர்வு எழுத அனுமதிக்க மாட்டேன் என்று பள்ளி தலைமையாசிரியர் மிரட்டியுள்ளார். இதனால் கொந்தளித்த மாணவிகள் பள்ளி வளாகத்திலேயே உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை நுங்கம்பாக்கம் மகாலிங்கபுரத்தில் மாநகராட்சி அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. சனிக்கிழமையான இன்று பள்ளி செயல்பட்டது. திடீரென ப்ளஸ் டூ மாணவிகள் 20-க்கும் மேற்பட்டவர்கள் நீட் தேர்வுக்கு எதிராக முழக்கமிட்டபடி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். விரைந்து வந்த காவல்துறையினர் மாணவிகளை அப்புறப்படுத்தும் முயற்சியில் இறங்கினர். 2 மணி நேரத்துக்கும் மேல் மாணவிகளின் போராட்டம் நீடித்ததால் காவல்துறை துணை ஆணையர் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து மாணவிகள் பள்ளிக்குள் சென்றனர்.
அப்போது, போராட்டம் நடத்திய ப்ளஸ் டூ வகுப்பு மாணவிகளுக்குத் தலைமையாசிரியர் பொன்னியம்மாள் மிரட்டல் விடுத்தார். இதையடுத்து, கொந்தளித்த மாணவிகள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து மாணவிகளின் பெற்றோர்கள் பள்ளிக்கு படையெடுத்தனர். மாணவிகளுடன் பெற்றோர்களும் சேர்ந்துகொண்டதால் பரபரப்பு நிலவியது.
அப்போது, "போராட்டம் நடத்திய மாணவிகளைக் காலாண்டுத் தேர்வு எழுத அனுமதிக்க மாட்டேன். அவர்களுக்கு டி.சி கொடுத்துவிடுவேன்" என்று தலைமையாசிரியர் பொன்னியம்மாள் மிரட்டியுள்ளார். இதனால் கொந்தளித்த மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மாணவி ஒருவர், காலாண்டு தேர்வு எழுத அனுமதிக்க மாட்டேன் என்று தலைமையாசிரியர் கூறினார்.
நீங்கள்தான் (பத்திரிகையாளர்கள்) நியாயம் செல்லுங்கள். நாங்கள் நீட் தேர்வுக்கு எதிராகத்தான் போராட்டம் நடத்தி வருகிறோம். நியாயமான எங்களது போராட்டத்தைத் தடுக்க பார்க்கிறார்கள். நீட் தேர்வு தடை செய்யும் வரை எங்களது போராட்டம் தொடரும்" என்றார்.
இதனிடையே, கல்வித்துறை அதிகாரி பள்ளிக்கு விரைந்து வந்தார். அவரும், தலைமையாசிரியர் பொன்னியம்மாளும் மாணவிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, உங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது. உங்கள் உணர்வுகளைப் புரிந்து கொண்டுள்ளோம்.
உங்களது கோரிக்கைகளை அரசிடம் கொண்டுசெல்வோம். மாணவிகள் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அது குறித்து விசாரிக்கப்படும்" என்றனர். இதையடுத்து மாணவிகள் அமைதி காத்தனர். பெற்றோர்களும் வீட்டுக்குச் சென்றனர். மாணவிகளின் திடீர் போராட்டத்தால் நுங்கம்பாக்கம் பகுதி பரபரப்புடன் காணப்பட்டது.