நீல திமிங்கல விளையாட்டுக்கு எதிராக மதுரை ஐகோர்ட்டு தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது!!...
மதுரை ஐகோர்ட்டில் நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் நேற்று வழக்குகளை
விசாரித்தனர். அப்போது வக்கீல் கிருஷ்ணமூர்த்தி ஆஜராகி, “இணையதளத்தில் புளூவேல் எனப்படும் நீலத்திமிங்கல விளையாட்டு விளையாடி இளைஞர்கள் பலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்த விளையாட்டுக்கு முழுமையாக தடை விதிக்கக்கோரி வழக்கு தொடர அனுமதிக்க வேண்டும்“ என்று முறையிட்டார். ஆனால் இந்த பிரச்சினை குறித்து ஐகோர்ட்டு தானாக முன்வந்து (சூ–மோட்டோ) விசாரிக்கும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
பின்னர் இதுதொடர்பான வழக்கை தாக்கல் செய்யுமாறும், அதை வருகிற திங்கட்கிழமை விசாரணைக்கு பட்டியலிடுமாறும் ஐகோர்ட்டு பதிவாளருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அந்த உத்தரவு வருமாறு:–
“புளூ வேல் விளையாட்டால் 19 வயது மாணவன் விக்னேஷ் தற்கொலை செய்து கொண்டதாக ஊடகங்கள் மூலம் தெரியவந்துள்ளது. ரஷியாவில் தொடங்கப்பட்ட இந்த விளையாட்டில் 50 ஆபத்தான கட்டளைகளை தாண்டி தற்கொலை என்ற கட்டளையுடன் விளையாட்டு முடிகிறது.
மதுரையில் இறந்த மாணவர் விக்னேஷ், பி.காம் 2–ம் ஆண்டு படித்துள்ளார். ‘புளூவேல் ஒரு விளையாட்டு அல்ல, விபரீதம்‘ என அவர் கடிதம் எழுதி வைத்துள்ளார். அதோடு விளையாட்டில் நுழைந்தால், அதிலிருந்து வெளியே வர முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.
போலீசாரின் விசாரணையில் புளூவேல் விளையாட்டிற்கு அடிமையாகி இறந்ததாக சந்தேகிக்கப்படும் நபர்கள் மாடியில் இருந்து குதித்து இறந்துள்ளனர். ஆனால் இந்த மாணவர் விதிவிலக்காக வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
புளூவேல் விளையாட்டை நடத்தும் நிர்வாகி, மாணவன் விக்னேஷின் வீடு மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்வதற்கு ஏற்றதாக இல்லை என தெரிந்து வைத்திருக்கலாம். மதுரையில் இந்த விளையாட்டை 75 பேர் விளையாடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் அதிர்ச்சி தரக்கூடியதாகவும், முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்துவதாகவும் உள்ளது.
விளையாட்டில் நுழைபவர்களை அதன் நிர்வாகி மன ரீதியாக தனது கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்து தற்கொலைக்கு தூண்டி உயிரிழப்புக்கு காரணமாக இருக்கிறார். இப்படிப்பட்ட சூழலில் இணையதளத்தில் குழந்தைகள் என்ன விளையாடுகின்றனர் என்பது கண்காணிக்கப்படாமல் உள்ளது. தமிழகத்தில் உள்ள இன்டர்நெட் மையங்களில் இணையதளம் மூலம் புளூ வேல் விளையாட்டை ஊக்கப்படுத்துவதாக தெரிகிறது.
இந்த விளையாட்டில் 25 வயதுக்கு கீழ் உள்ள இளைஞர்கள் தான் இரையாக்கப்படுகின்றனர் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த விளையாட்டை நடத்துபவர்கள் குழந்தைகளுடன் விளையாடுகின்றனர். இந்த விளையாட்டின் தொடக்கம் மகிழ்ச்சியானதாகவும், முடிவு ஆபத்தானதாகவும் இருக்கிறது. இடைப்பட்ட காலத்தில் விளையாட்டுக்கு இளைஞர்கள் அடிமையாகி விடுகின்றனர்.
இதனால் இந்த விளையாட்டால் ஏற்படும் ஆபத்துகளை குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. புளூவேல் விளையாட்டிலிருந்து மாணவர்கள், இளைஞர்களை பாதுகாக்க, அவர்களிடம் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். போலீசாரும், சமூக ஆர்வலர்களும் இந்த பணியில் முக்கிய பங்கு வகிக்க வேண்டும்.
குழந்தைகள் கணினி, செல்போனில் என்ன செய்கின்றனர் என்பதை கண்காணிக்க வேண்டியது பெற்றோரின் முக்கியமான கடமையாகும். புளூவேல் விளையாட்டை விளையாடுபவர்களுக்கு கவுன்சிலிங் கொடுத்து, செல்போனில் இருந்து இந்த விளையாட்டுகளை நீக்க வேண்டும். புற்றுநோய் போல் பரவி வரும் இந்த விளையாட்டின் கொடூர வளர்ச்சியை தடுக்க சரியான நேரம் வந்துள்ளது. இதில் பெற்றோரும், போலீசாரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
தற்போதைய நிலையில் இந்த விளையாட்டை தடுக்க போதிய அமைப்பு முறை இல்லை. இதனால் பொதுமக்களின் நலனை கருதி கோர்ட்டு இந்த பிரச்சினையில் தலையிடுகிறது. ஐகோர்ட்டு இதனை தானாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரிக்கிறது.
இந்த வழக்கில், மத்திய தகவல்–தொடர்புத் துறை செயலாளர், உள்துறை முதன்மைச் செயலாளர், தமிழக போலீஸ் டி.ஜி.பி., சென்னை சைபர் கிரைம், சமூகநலத்துறை, பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறை இயக்குனர்கள், மதுரை மாவட்ட கலெக்டர், மதுரை மாநகர போலீஸ் கமிஷனர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரை எதிர்மனுதாரர்களாக சேர்த்து மனுத்தாக்கல் செய்யவும், இந்த வழக்கை வருகிற 4–ந்தேதி விசாரணைக்கு பட்டியலிடவும் மதுரை ஐகோர்ட்டு பதிவாளருக்கு உத்தரவிடுகிறோம்.“
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்