தனியார் பள்ளி ஆசிரியருக்கு தகுதி தேர்வில் விலக்கு?
ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெறாமல், தனியார் பள்ளிகளில் ஆசிரியராக பணிபுரிவோருக்கு, மத்திய அரசு புதிய படிப்பை அறிமுகம் செய்துள்ளது. 2019க்குள் படிப்பை முடிக்கவும், கெடு விதிக்கப் பட்டுள்ளது.
அவகாசம் : மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி, பள்ளி ஆசிரியர்கள், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்தச் சட்டப்படி, தனியார் பள்ளி ஆசிரியர் கள், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற, 2009ல், ஐந்து ஆண்டுகள் அவகாசம் அளிக்கப்பட்டது; அது, 2014ல் முடிந்தது. பின் மேலும், இரண்டு ஆண்டுகளுக்கு, அவகாசம் நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில், 2019க்குள் தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதை தொடர்ந்து, 8ம் வகுப்பு வரையான, தனியார் பள்ளிகளில் பணிபுரியும், பட்டம் மற்றும் டிப்ளமா முடித்த ஆசிரியர்களுக்கு, சிறப்பு தொடக்க கல்வி டிப்ளமா படிப்பையும், மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.
அனுபவம் : இந்த படிப்பை, என்.ஐ.ஓ.எஸ்., என்ற, தேசிய திறந்தநிலை பள்ளி யில், தொலைநிலை கல்வி யாக, இரண்டு ஆண்டு படிக்கலாம். இதற்கான பதிவு, செப்., 15ல் முடிவதாகவும், அதற்குள் ஆசிரியர்கள் பதிவு செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக் பள்ளி நிர்வாக சங்க தலைவர், ஜே.மார்ட்டின் கென்னடி கூறியதாவது: தனியார் பள்ளிகளில், பல ஆண்டு அனுபவம் பெற்ற ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். அவர்களை, வெறும் தகுதித் தேர்வுக்காக, பணியில் இருந்து அனுப்ப முடியாது. எனவே, அவர்கள் பணியில் தொடரும் வகை யில், மத்திய அரசு, இந்த படிப்பை அறிமுகம் செய்து உள்ளது வரவேற்கத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார்.