#அன்புள்ளவாத்திக்கு
வெவரம் தெரிஞ்ச ஒடனே
பள்ளிக்கு போடா மவனேன்னு
வம்படியா இழுத்து வந்து
உன் கிட்ட விட்டாக
அரை டவுசர தூக்கி பிடிச்சினு
மூக்கொழுகி நின்னப்ப
என் சிலேட்டுல
கைபிடிச்சி ஆ வரைஞ்ச
ஆசானே
நெனப்பால நிக்குதைய்யா
தூக்கத்துல எழுப்புனாலும்
அந்த மனப்பாடம் மறக்கலய்யா
யார்யாரோ வந்தாங்க யார்யாரோ போனாங்க
கழுத வயச நான் கடந்தும்
எனக்கு வாத்தின்னா உன் நெனப்பு
மறக்காம தோணுதப்பு
பச்ச மண்ணு தான் என்ன
மனுசனா மாத்த நீ பட்ட பாடு பெரும்பாடு
அடிச்சும் சொன்ன அணைச்சும் சொன்ன
அதால தான் எப்பவுமே மனசுல நின்ன
மஞ்ச பைய தூக்கி நீ வருவ
உன் மத்தியான சோறுலயும் பங்கிட்டு தருவ
தாயா பதிஞ்ச உன் உருவ
தவறியும் மறக்கல நான் குருவே
எவ்வளவோ ஒசரம் நான் வந்தாச்சு
எப்போதும் உன்ன பத்தி தான் இருக்குது என் பேச்சு
நீ தானய்யா என் முன்னேற்ற மூச்சு
இது நீ வளத்த புள்ள பேசும் பேச்சு
நீ நல்லா இருக்கியோ இல்லையோ ஐயா
ஒன்னால ஒசந்து இருக்கேன் மெய்யா
ஒரு வார்த்தையும் சொல்லல நான் பொய்யா
எப்பவுமே என் குருவே நீதானய்யா.
#ஆசிரியரை_மதிக்காத_நாடு_உருப்படாது.
#அனைத்துஆசிரியர்களுக்கும்_ஆசிரியர்தின_நல்வாழ்த்துகள்
சீனி.தனஞ்செழியன்,
முதுகலைத்தமிழாசிரியர்,
அஆமேநிப, திருவலம்-632515.