நீட் தேர்வுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்து போராடிய தமிழக மாணவி அனிதா தற்கொலை!
உச்ச நீதிமன்றத்தில் 'நீட்' தேர்வுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்து போராடிய தமிழக மாணவி அனிதா இன்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நாடு முழுவதும் மருத்துவக் கல்வி சேர்க்கையானது இனி 'நீட்' தேர்வு மூலமாகத்தான் நடைபெறுமென்று மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது. இதனை எதிர்த்து தமிழக அரசு சார்பில் மாநில வழிக்கல்வி பயிலும் மாணவர்களுக்கு என்று 85% சிறப்பு இட இதுக்கீடு அளித்து அரசாணை வெளியிட்டது.
ஆனால் இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசின் அரசாணை ரத்து செய்யப்பட்டது. இதற்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அத்துடன் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு ஒரு வருடத்திற்கு விலக்கு அளிக்கும் சட்ட முன்வரைவினை மத்திய அரசு அனுமதியுடன் நிறைவேற்றவும் தமிழக அரசு முயன்று வந்தது.
அதே நேரத்தில் 'நீட்' தேர்வு மூலம் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தமிழகத்தின் அரியலூர் மாவட்டம் குழுமூர் என்ற கிராமத்தினைச் சேர்ந்த அனிதா என்ற மாணவி தன்னை எதிர் மனுதாரராக சேர்த்துக் கொண்டார். அங்கு நீட் தேர்வுக்கு எதிராக மாநில மாணவர்களின் தரப்பினை முன்வைத்து வாதாடினார்.
ஆனால் தமிழக அரசின் வழக்கும், அனிதா தொடர்ந்த வழக்கும் உச்ச நீதிமன்றத்தினால் தள்ளுபடி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கையானது நீட் அடிப்படையில் நடைபெறுமென்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் மாணவி அனிதா குழுமூரில் உள்ள தனது இல்லத்தில் இன்று மதியம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தாயினை இழந்து விட்ட அனிதாவின் தந்தை மூட்டை தூக்கும் கூலித் தொழிலாளி ஆவார். தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவரான அனிதா +2 தேர்வில் 1,176 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். அத்துடன் மருத்துவ சேர்க்கைக்கான 'கட் ஆப்பாக' 196.75 மதிப்பெண்களைப் பெற்றுள்ளார்.
மருத்துவராக வேண்டும் என்ற தனது லட்சியத்தை நிறைவேற்ற, உச்ச நீதிமன்றம் வரை சென்று சட்டப்போராட்டம் நடத்திய ஒரு ஏழை மாணவியின் வாழ்வானது, ஒரு தூக்கு கயிறில் முடிந்து போன சோகம் நிகழ்ந்துள்ளது