தீவிரமாக போராடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் .. 2003 போராட்டம் மீண்டும் திரும்புகிறதா?
புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், ஊதிய முரண்பாட்டைக் களைய வேண்டும், 8 வது ஊதியக் குழுவை அமைக்க வேண்டும். அது வரை இடைக்கால நிவாரணமாக 20 சதவிகிதம் ஊதிய உயர்வு வழங்க வேண்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பர் 11-ம் தேதி முதல் 7 லட்சம் அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
2003 போராட்டம்
அரசு ஊழியர்களின் போராட்ட வரலாற்றிலேயே 2003-ம் ஆண்டு போராட்டம் அழியா நினைவுகளாக ஒவ்வோர் அரசு ஊழியர் நினைவிலும் பதிவாகி உள்ளது. அப்போது அந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களில் ஒரு லட்சத்து 22 ஆயிரம் பேரை ஒரே நாளில், அன்றைய அரசு டிஸ்மிஸ் செய்தது. இருந்தாலும் அரசு ஊழியர்கள் போராட்டம் முடிவுக்கு வரவில்லை.
போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்களை, கொலைகுற்றவாளிகள் போல நள்ளிரவில் வீடு புகுந்து போலீஸார் கைது செய்த கொடுமையும் நடைபெற்றது. எனினும் போராட்டம் ஓயவில்லை. மாறாக முன்னைவிட தீவிரமாகப் போராட்டங்கள் நடைபெற்றன. இதனால் வேறு வழியில்லாமல், அரசு ஊழியர் சங்கங்களுடன் ஜெயலலிதா பேச்சுவார்த்தை நடத்தினார். சஸ்பென்ட் செய்யப்பட்ட ஊழியர்கள் மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.
மீண்டும் போராட்டம்
இப்போது புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட மூன்று கோரிக்கைகளை முன் வைத்து செப்டம்பர் 11- முதல் அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தக் கோரிக்கைகளில், ஊழியர்கள் தங்களின் வாழ்வாதாரமாகக் கருதுவது புதிய ஓய்வு ஊதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பதுதான். இந்தத் திட்டத்தின் கீழ் கடந்த 14 ஆண்டுகளாக அரசு ஊழியர்களின் சம்பளத்திலிருந்து 10 சதவிகிதம் தொகை பிடித்தம் செய்யப்படுகிறது. அதே அளவுக்கு அரசு சார்பில் 10 சதவிகிதம் செலுத்தப்படுகிறது. இதுவரை அரசு ஊழியர்கள் தரப்பிலிருந்து 9 ஆயிரம் கோடி ரூபாய் பிடிக்கப்பட்டுள்ளது. அரசு தரப்பில் 9 ஆயிரம் கோடி ரூபாய் தரப்பட்டிருக்கிறது. இந்த 18 கோடி ரூபாயை ஓய்வு ஊதியத்துக்காக மத்திய ஓய்வூதிய ஒழுங்காற்று ஆணையத்தில் செலுத்தாமல் தமிழக அரசு செலவழித்து விட்டது.
இதனைத் திருப்பித் தர வேண்டும் என்பதுடன் பழைய ஓய்வூதியத் திட்டமே தொடர வேண்டும், புதிய ஓய்வூதியத் திட்டம் வேண்டாம் என்றுதான் ஊழியர்கள் கூறி வருகின்றனர். புதிய ஓய்வு ஊதியத் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய சாந்தா ஷீலா நாயர் தலைமையில் கடந்த 2016-ம் ஆண்டு ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவுக்கு நான்குமுறை காலக்கெடு நீடிக்கப்பட்டபோதிலும், எந்தவிதப் பரிந்துரையையும் செய்யவில்லை.
முடிவு எடுக்காத குழு
இதனிடையே சாந்தா ஷீலா நாயர் ஓய்வு பெற்று விட்டதால், கடந்த ஜூலை மாதம் ஶ்ரீதர் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார். இந்தக் குழுவின் தலைவர் ஶ்ரீதரை அரசு ஊழியர்கள் சங்கப் பிரதிநிதிகள் சிலர் சந்தித்தபோது, புதிய ஓய்வு ஊதியத் திட்டத்தில் உள்ள குறைபாடுகளை மட்டும் களைய உள்ளதாகத் தெரிவித்திருக்கிறார். புதிய ஓய்வூதியத் திட்டமே வேண்டாம் என்று அரசு ஊழியர்கள் கோரிக்கை வைக்கும் நிலையில், அதற்கு மாறாக அந்தத் திட்டத்தில் உள்ள குறைகளை மட்டுமே ஆய்வு செய்து, அதே திட்டத்தை பரிந்துரை செய்யப்போவதாக ஶ்ரீதர் கூறியது அரசு ஊழியர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இதனால், மீண்டும் ஒரு போராட்டத்தை அறிவித்து, திங்கள் கிழமை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் அரசு ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் கோரிக்கைகள் எல்லாம் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பதில்தான் இருக்கிறது.
முதல்வரின் கோரிக்கை
அரசு ஊழியர்களின் சங்கப் பிரதிநிதிகள் கடந்த சில நாள்களுக்கு முன்பு ஈரோட்டில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்துப் பேசினர். கோரிக்கைகளைப் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரிடம் கூறியிருக்கின்றனர். ஆனால், நவம்பர் 30-ம் தேதி வரை பொறுத்திருக்கும்படி முதல்வர் அவர்களிடம் சொல்லியிருக்கிறார். நவம்பர் 30-ம் தேதி புதிய ஓய்வு ஊதியத்திட்டம் குறித்துதான் அறிக்கை வெளியிட உள்ளனர். எனவே, அதைத் தடுக்கும் வகையில்தான் இப்போதே போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம் என்று அரசு ஊழியர்கள் சங்கங்கள் அறிவித்துள்ளன.
அரசு ஊழியர்களுக்கு நோட்டீஸ்
இந்தச் சூழலில் எப்படியும் அரசு ஊழியர்களின் போராட்டத்தை ஒடுக்க வேண்டும் என்று தமிழக அரசு நினைக்கிறது. ஆனால்,கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை என்று அரசு ஊழியர்கள் உறுதிபடத் தெரிவித்துள்ளனர். வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ஒரு லட்சம் ஊழியர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. நோட்டீஸ் அனுப்புவதாகக் கூறி மிரட்டுவதால் மட்டும் எங்கள் போராட்டம் ஓய்ந்து விடாது. எந்த வித அடக்குமுறைக்கும் அஞ்சமாட்டோம் என்று நம்மிடம் பேசிய அரசு ஊழியர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் கூறினர்.
புதிய ஓய்வு ஊதியத்திட்டத்தை கைவிடுதல், ஊதிய முரண்பாட்டுக்குத் தீர்வு காணுதல், ஊதிய உயர்வு அமல்படுத்துவதற்கு முன்பாக இடைக்கால நிவாரணமாக 20 சதவிகிதம் தொகை வழங்கபட வேண்டும் ஆகிய கோரிக்கைகளுக்கு இப்போது உடனடியாக நிதி ஒதுக்கி அமல்படுத்த வேண்டும் என்று ஊழியர்கள் கேட்கவில்லை. அரசின் நிலைப்பாட்டை உறுதியான அறிவிப்பாக வெளியிட வேண்டும் என்பதுதான் அவர்களின் கோரிக்கையாக இருக்கிறது. ஆனால், உறுதியான அறிவிப்புகளைக் கூட வெளியிடாமல் அரசு தடுமாற்றத்தில் இருக்கிறது.