பாரம்பரிய விளையாட்டை மறந்ததால் பரிதவிக்கும் மாணவர்கள்
மாணவர்கள் மத்தியில் செல்போன் பயன்பாட்டை குறைக்க அவர்களுக்கு பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடுவதில் ஊக்கப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மாணவ, மாணவிகள் மொபைல் மற்றும் கம்ப்யூட்டர்களில் ஆன்லைன் விளையாட்டுகளில் மூழ்கி உள்ளதுடன், தற்போது ப்ளூவேல் விளையாட்டால் தற்கொலை செய்யும் அளவிற்கும் தள்ளப்பட்டுள்ளனர். இதை தவிர்க்க பள்ளிகளில் மாணவர்களுக்கு பாரம்பரிய விளையாட்டுகளை ஊக்குவிக்க வேண்டும். கோ கோ, கபடி, சிலம்பம், களரி, வாலிபால், புட்பால் உள்ளிட்ட பல்வேறு வகையான விளையாட்டுகளை ஊக்குவிக்க வேண்டும்.
இதன் விளைவாக அவர்களின் மூளை செயல்பாட்டு திறன் அதிகரிக்கும். அதோடு கல்வியில் சிறந்து விளங்குவதோடு எதிர்காலத்தில் நல்ல அறிவார்ந்த சமூகம் உருவாகும் நிலை ஏற்படும். இந்த பணியை பள்ளி பருவத்தில் ஊக்குவிக்கவில்லை என்றால் எந்த நிலையிலும் செய்ய முடியாது. இதனால் தொடக்க கல்வி முதல் மேல்நிலைக்கல்வி வரை விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:வேலூர் மாவட்டத்தில் தற்போது மாணவர்கள் விளையாட தயாராக உள்ளனர். ஆனால் ஆசிரியர்கள் ஊக்குவிப்பதில்லை. விளையாட்டு நேரங்களில் பாடம் நடத்துகின்றனர். மாவட்டத்தில் விளையாட்டு மைதானம் இல்லை. இதனால் மாணவர்கள் இருக்கும் ஒரு சில விளையாட்டு மைதானங்களில் விளையாடுவதை தவிர்த்து செல்போன், கம்ப்யூட்டர்களில் விளையாடுவதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
இதனால் அவர்கள் மனரீதியாக மிகுந்த பாதிப்பு அடைகின்றனர். இதற்கு பெற்றோர்களும் ஒரு காரணமாக அமைகின்றனர். அவர்கள் போதிய அளவு சலுகை கொடுக்காமல் மாலை நேரத்தில் விளையாட கட்டாயப்படுத்த வேண்டும். பள்ளிகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தினால் மாணவர்கள் பாரம்பரிய விளையாட்டிற்கு கண்டிப்பாக திரும்புவார்கள் என்பதில் சந்தேகமில்லை. நேற்று முன்தினம் ஆம்பூரில் ப்ளூவேல் கேம் விளையாடிய பிளஸ் 2 மாணவி கண்டுபிடிக்கப்பட்டு ஆசிரியர்கள் கவுன்சில் வழங்கினர். இதேபோல் மாவட்டத்தில் மாணவ, மாணவிகள் ப்ளூவேல் கேம் விளையாடி வருகிறார்களா என்று ஆசிரியர்கள் கண்டுபிடித்து அவர்களுக்கு ஆலோசனை வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.