ஆசிரியர்கள் சம்பளத்தை மட்டும் ஒப்பிட்டுப் பார்ப்பது எவ்வகையில் நீதி? "- எது நீதி? எது நேர்மை? - ARTICLE
உயர்நீதிமன்றம் ஆசிரியர்கள் சம்பளத்தை, அன்றாடக் கூலியாட்கள் சம்பளத்தோடு ஒப்பிட்டுப் பார்ப்பதுபோல், அரசு ஊழியர், எம்.எல்.ஏ., நீதிபதிகள் எல்லோர் சம்பளத்தையும் கூலியாட்கள் சம்பளத்தோடு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.
அப்படி ஒப்பிட்டுப் பார்ப்பதால் என்ன பயன்?
வேலையின் படிநிலைகளுக்கு ஏற்ப சம்பள வேறுபாடு, மடுவுக்கும் மலைக்கும் உள்ள வேறுபாடாக இருப்பது எல்லா துறையிலும், எல்லா காலத்திலும், எல்லா அரசிலும் இருந்து வருவதுதான். அதை எவரும் மறுக்க முடியாது.
அப்படியிருக்க, இதில் ஆசிரியர்கள் சம்பளத்தை மட்டும் ஒப்பிட்டுப் பார்ப்பது எவ்வகையில் நீதி?
கூலிக்காரன் உழைக்கும் நேரத்தை நீதிபதி உழைக்கும் நேரத்தோடும், கூலிக்காரன் சம்பளத்தை நீதிபதி சம்பளத்தோடும் மக்கள் ஒப்பிட்டுப் பார்க்க மாட்டார்களா?
*ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. அதற்கு இழப்பீடு ஆசிரியர்களின் சம்பளத்திலிருந்து எப்படிக் கொடுக்க முடியும்?*
*மாணவர்கள் இழப்பது கல்வியை. அதைப் பணத்தால் எப்படி ஈடுகட்ட முடியும்?*
ஆசிரியர்களைக் கொச்சைப்படுத்துவது உணர்வு வயப்பட்டதன் விளைவு.
பணியைச் சரியாகச் செய்யாத ஆசிரியரை கடுமையாகத் தண்டிக்கலாம். மாறாக, ஒட்டுமொத்த ஆசிரியர்களின் மனங்களை ஒடிப்பது பாதக விளைவையே தரும்.
அனைத்துக்கும் அடிப்படை ஆசிரியர்கள், அவர்களின் பணிகள் என்பதை எவர் மறந்து செயல்பட்டாலும் அது சரியான அணுகுமுறை ஆகாது!
*மதுவாலும், போதையாலும் மாணவச் சமுதாயமே பாதிக்கப்பட்டுள்ளது அரசுக் கொள்கையால். அதைத் தடுக்க, நீதிமன்றங்கள் ஏன் கடும் நடவடிக்கை அரசு மீது எடுக்கக் கூடாது? மாணவர் நலன் காக்க அது கட்டாயம் அல்லவா?*
சமச்சீர் கல்வியை ஏற்க முடியாது என்று ஜெயலலிதா பிடிவாதம் பிடித்து, நீதிமன்ற தீர்ப்புக்குப் பின் புத்தகங்கள் அச்சிட்டு வரும்வரை, மாதக்கணக்கில் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டதே!
கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நூல்கள் பாழாக்கப்பட்டனவே. அப்போது நீதிமன்றங்கள் மாணவர்களுக்கு வழங்கிய இழப்பீடு என்ன?
*இரண்டு மாத காலம் அரசுக்கு அவகாசம் அளித்துதான் போராட்டம் நடத்துகிறார்கள். அப்படியிருக்க அரசை விட்டுவிட்டு, போராடுகிறவர்களை மட்டும் கண்டிப்பது நீதியாகுமா?*
நீதிமன்றம், தமிழக அரசுக்கு ஒரு காலக்கெடு கொடுத்து, சங்கங்களுடன் பேசி ஒரு முடிவுக்கு வரவேண்டும்; இல்லையென்றால் கோரிக்கைகள் சார்ந்து நீதிமன்றமே ஆணையிடும் என்று நீதிமன்றம் நெருக்கடி கொடுப்பதுதானே நீதியாகும்? நேர்மையாகும்?
நீதிமன்றம் நியாயங்களை நிச்சயம் ஏற்கும்; ஏற்க வேண்டும் என்பதால் இந்த நியாயங்களை வெளியிட வேண்டியது ஒரு குடிமகனின் கட்டாயமாகிறது!