நீட் தேர்வு முறைக்கு எதிர்ப்பு: மருத்துவ மாணவர் சேர்க்கையை நிறுத்தியது வேலூர் சிஎம்சி!
2017-2018ம் ஆண்டுக்கு நீட் தேர்வு அடிப்படையிலான மருத்துவ மாணவர் சேர்க்கையை நிறுத்தி வைப்பதாக வேலூர் கிறித்துவ மருத்துவ கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.
மருத்துவ மாணவருக்கான தகுதியாக மதிப்பெண்களை மட்டுமே மத்திய அரசு பார்க்கிறது என்றும் தாங்கள் மக்கள் சேவை தலைமை பண்பு உள்ளிட்டவற்றை கொண்டே மதிப்பிடுகிறோம் என்று கல்லூரி நிர்வாகம் சார்பில் விளக்கம் அளித்துள்ளனர்.
இந்த ஆண்டு சிஎம்சி மருத்துவக் கல்லூரியில் ஒரே ஒரு மாணவர் மட்டும் எம்பிபிஎஸ் படிப்பில் சேர்க்கப்பட்டுள்ளார். போரில் வீர மரணமடைந்த ராணுவ வீரரின் மகனான அவருக்கு மத்திய அரசின் பரிந்துரையின் பேரில் இந்த இடம் ஒதுக்கப்படுகிறது. அதேபோல் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவப் படிப்பில் இதயநோய் நிபுணத்துவம் பிரிவில் உச்சநீதிமன்ற உத்தரவின்படி ஒருவருக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் நடப்பாண்டில் எம்பிபிஎஸ் மருத்துவப் படிப்பில் மொத்தமுள்ள 99 இடங்களும், சூப்பர் ஸ்பெஷாலிட்டி எனப்படும் சிறப்பு மருத்துவப் படிப்பில் உள்ள 66 இடங்களும் காலியாக இருக்கும் என்று சிஎம்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. மேலும் இதுகுறித்து தகவல் அளித்த சிஎம்சி நிர்வாகம், நீட் தேர்வு முறையில் மாணவர் சேர்க்கை என்பது அரசியலமைப்புச் சட்டம் 30(1) -வது விதியின்படி சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களுக்கு வழங்கிய உரிமைகளுக்கு எதிரானது. இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் இரண்டு வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாகவும், அந்த வழக்கில், விரைவில் தீர்ப்பு வரும் என்றும் தெரிவித்துள்ளனர்.