மாணவர்களின் மகிழ்ச்சியே சிறந்த கல்வியைக் கொடுக்கும்" - குளிர்சாதன வசதியுடன் ஓர் அரசுப் பள்ளி!
அந்தக் குளிரூட்டப்பட்ட அறைக்குள் ஆடலும் பாடலும் நிரம்பி வழிகிறது. சுவர் முழுக்க அழகழகான ஓவியங்கள்... இது ஏதோ பெரிய அரங்கத்தில் நடக்கும் நிகழ்ச்சி அல்ல. ஒரு அரசுப் பள்ளியின் ஒரு வகுப்பறைதான். அங்கே ஆடிப் பாடிக்கொண்டிருந்தவர்கள் ஆசிரியரும் மாணவர்களும்! பள்ளி என்பது மகிழ்ச்சியுடன் கற்கும் இடம் என மேற்கோள் காட்டப்படும் அல்லவா, அதற்கு சிறந்த ஓர் உதாரணமாக அந்தப் பள்ளி காட்சியளித்தது.
புதுக்கோட்டை, வடக்கு ராஜவீதியில் இருக்கிறது அந்தப் பள்ளி. 1958-ம் ஆண்டு தொடக்கப் பள்ளியாக ஆரம்பிக்கப்பட்டு, நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ள இந்தப் பள்ளியில் 126 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். ஒரு தலைமை ஆசிரியரும் 8 ஆசிரியர்களும் பணியாற்றி வருகின்றனர். இங்கே ஒன்று முதல் நான்காம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் வகுப்பறை குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும், வகுப்பறையின் உள் மற்றும் வெளிப் பகுதிகளில் தாவரங்கள், விலங்குகள், போக்குவரத்து, விவசாயம், சாலைவிதிகள் போன்றவற்றை விளக்கும் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதியும் இருக்கிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில், குளிர்சாதன வசதியுடன் கூடிய முதல் அரசுப் பள்ளி என்ற பெருமையுடன் ஜொலிக்கிறது இந்தப் பள்ளி.
புன்னகையுடன் வரவேற்ற பள்ளியின் ஆசிரியை பவுலின் ஜெயராணி, "இந்தப் பள்ளி இருப்பது குறைவான இடத்தில்தான். எனினும் சொற்ப இடத்திலேயே மரக்கன்றுகள் நட்டு, மாணவர்களுக்கு மரம் நடுதல் பற்றிய விழிப்பு உணர்வை ஏற்படுத்தி இருக்கிறோம். இங்கே படிக்கும் பெரும்பாலான மாணவர்களின் பெற்றோர்கள், ஏழைகள் மற்றும் படிக்காதவர்கள். அதனால், கூடுதல் அக்கறையுடன் அந்த மாணவர்களைச் சமுதாயத்தில் உயர்த்தும் கடமை எங்களுக்கு உள்ளது. படிக்கவரும் மாணவர்களுக்கு மகிழ்ச்சியாகச் சுழலும், தேவையான வசதியும் இருக்க வேண்டும் என விரும்பினோம். எனவே, பழமையான இந்தப் பள்ளியை முன்மாதிரியான ஒரு பள்ளியாக மாற்றும் பணியில் இறங்கினோம். தன்னார்வலர்கள், கொடையாளர்களின் உதவியுடன் குளிர்சாதன வசதி செய்தோம். தொங்கு கூரை, ஓவியங்கள், மின்விளக்குகள் என ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் செலவழித்து பல்வேறு வசதிகளை உருவாக்கினோம்.
மாணவர்கள் மகிழ்ச்சியோடுப் படிக்கும்போதே அவர்களின் கற்றல் திறன் அதிகரிக்கும் என்பதாக இந்த முயற்சிகளை எடுத்து வருகிறோம். இதற்காக மிகவும் அயராது பாடுபட்டவர்கள், பள்ளியின் தலைமையாசிரியர் சிவசக்திவேல் மற்றும் தமிழ் ஆசிரியர் மீனாட்சி சுந்தரம். இந்தக் குளிர்சாதன வசதி செய்யப்பட்ட வகுப்பறையை, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி செந்திவேல் முருகன் தொடங்கிவைத்தார். மாணவர்கள் மகிழ்வுடன் கல்வி கற்று, சமுதாயத்தின் சிறந்த குடிமகன்களாக உயர வேண்டும் என்பதுதான் எங்கள் ஆசை" என்கிறார்.
அரசுப் பள்ளிகளின் தரம் என்பது தனியார் பள்ளிகளை விட கொஞ்சமும் குறைந்தது இல்லை என நிருபிக்கும் விதத்தில் பல ஆசிரியர்கள், அதிகாரிகள் உழைத்து வருகின்றனர். அவர்களின் அர்ப்பணிப்பான உழைப்பே அரசுப் பள்ளிகள் மீது பொதுமக்களின் கவனத்தை முழுமையாகத் திருப்பியுள்ளது. அதனால், பல அரசுப் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளைச் சேர்க்க பெற்றோர் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலை அனைத்து அரசுப் பள்ளிகளிலும் இருக்க வேண்டும். அதற்காக பணியாற்றும் அத்தனை பேருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகளைச் சொல்வோம்.