அரசு பள்ளியை தத்தெடுத்த மாவட்ட கலெக்டர்!!!
உ.பி.,யில், அரசு பள்ளியை தத்தெடுத்ததுடன், வாரந்தோறும் சனிக்கிழமையன்று , பள்ளிக்கு வந்து வகுப்பெடுக்கும் கலெக்டரை, பொதுமக்கள் பாராட்டி உள்ளனர்.
உ.பி.,யில், உள்ள வாரணாசியில், எல்.டி., கல்லுாரி வளாகத்தில் துவங்கப்பட்ட மாதிரி பள்ளியில், சுவாமி விவேகானந்தர், இரு மாதங்கள் தங்கியிருந்தார். இந்த பள்ளியை, வாரணாசி கலெக்டர், யோகேஷ்வர் ராம் மிஸ்ரா தத்தெடுத்துள்ளார். சனிக்கிழமைதோறும், மாணவர்களுக்கு, இரண்டு மணி நேரம் பாடம் நடத்துகிறார். இவரது வகுப்பில், மாணவர்கள் ஆர்வத்துடன் கற்கின்றனர்.
இது குறித்து, பள்ளி தலைமையாசிரியர், பாபுலால் யாதவ் கூறியதாவது:கலெக்டர், இந்த பள்ளியை தத்தெடுத்த பின், மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. பள்ளிக்கு சுற்றுச்சுவர், நுழைவாயில் அமைக்கப்பட்டு உள்ளன. வாட்டர் கூலர், டேபிள், நாற்காலிகள், விளையாட்டு பொருட்கள் ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. ஒவ்வொரு அதிகாரியும், ஒரு பள்ளியை தத்தெடுத்தால், பள்ளி மற்றும் கல்வியின் தரம் உயரும். இவ்வாறு அவர் கூறினார்.