68 ஆண்டுகள் பாலம் இல்லாமல் மாணவர்கள் தவிப்பு!
சூளகிரி ஒன்றியம் செக்காருலு உள்ளிட்ட நான்கு கிராமங்களில்
60 ஆண்டுகளாக ஆற்றின் குறுக்கே பாலம் வசதி இல்லாததால் பள்ளி மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட்டுள்ளது.
60 ஆண்டுகளாக ஆற்றின் குறுக்கே பாலம் வசதி இல்லாததால் பள்ளி மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட்டுள்ளது.
சூளகிரி ஒன்றியம், அங்கொண்டப்பள்ளி பஞ்., உள்ள செக்காருலு மற்றும் செம்பரசனப்பள்ளி பஞ்., சின்னபாப்பனப்பள்ளி, பெரியபாப்பனப்பள்ளி, ராமசந்திரபுரம் ஆகிய கிராமங்களில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். செக்காருலு பகுதியில் அரசு துவக்கப்பள்ளி மட்டுமே செயல்பட்டு வருகிறது. அதனால், நான்கு கிராம மாணவர்களும், மூன்று கிலோ மீட்டர் தூரம், பள்ளிக்கு நடந்து செல்ல வேண்டியுள்ளது. பள்ளிக்கு செல்லும் மாணவர்களுக்கு சாலை வசதியும் இல்லை. பேருந்தில் செல்வதற்கும் கிராமத்திலிருந்து இரண்டு கி.மீ., நடந்து செல்ல வேண்டியுள்ளது. மேல்நிலை கல்வி கற்க சுமார் 10 கிலோ மீட்டர் கடந்து சுளுரில் உள்ள அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலை பள்ளிகளுக்கு செல்லவேண்டியுள்ளது. மாணவர்கள் மட்டும் அல்லாமல் வேலை நிமித்தமாக செல்லும் மக்களும், செக்காருலு அருகே உள்ள சின்னாற்றை கடந்து, பிற பகுதிகளுக்கு செல்ல வேண்டும். மழை காலங்களில் ஆற்றில் வெள்ளம் ஏற்படுவதால் ஆற்றை கடக்க முடியாமல் சிரமப்படுகிறார்கள். கடந்த சில நாட்களாக, சூளகிரி சுற்று வட்டார பகுதியில் கனமழை பெய்து வருவதால், சின்னாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், மாணவர்கள், ஆற்றை கடந்து பள்ளிக்கு செல்ல முடியவில்லை. தற்போது, 60க்கும் மேற்பட்ட மாணவர்களின் படிப்பு கேள்விக்குறியாகியுள்ளது. சுமார் 60 ஆண்டுகளாக, சாலை மற்றும் பாலம் வசதி கேட்டு, பலமுறை கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எனினும், மக்களுக்கு அந்த வசதிகள் ஏற்படுத்தவில்லை. அப்பகுதி மக்கள் தங்கள் பிள்ளைகளின் படிப்பு பாதிக்கப்படுவதாக வேதனை தெரிவித்துள்ளனர்.