TET தேர்வெழுத வந்த பெண்ணுக்கு சுக பிரசவம்
தியாகதுருகம் அரசு பள்ளியில், ஆசிரியர் தகுதி தேர்வு எழுத வந்த பெண்ணுக்கு, பெண் குழந்தை பிறந்தது.
விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த, அந்தோணிராஜ் என்பவரின் மனைவி, நோயல் ரோஸ்மேரி, 24. நிறைமாத கர்ப்பிணியான இவர், 'டெட்' எனப்படும், ஆசிரியர் தகுதி தேர்வு எழுதுவதற்காக, நேற்று காலை, தியாகதுருகம் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளிக்கு வந்திருந்தார்.காலை, 10:00 மணிக்கு, தேர்வு துவங்கியது. 10:15 மணியளவில், ரோஸ்மேரிக்கு பிரசவ வலி ஏற்பட்டது.
எனினும், 25 கேள்விகளுக்கு பதில் எழுதிய நிலையில், வலி கடுமையானதால், தேர்வு மைய கண்காணிப்பாளரிடம் நிலைமையை கூறினார்.முதன்மை கண்காணிப்பாளர் சசிகலாதேவி, உடனடியாக, 108 ஆம்புலன்சை வரவழைத்து, ரோஸ்மேரியை, தியாகதுருகம் வட்டார சுகாதார மையத்திற்கு அனுப்பி வைத்தார்.அங்கு, ரோஸ்மேரிக்கு, காலை, 11:00 மணியளவில், சுக பிரசவத்தில், அழகான பெண் குழந்தை பிறந்தது. தகவல் அறிந்து, கணவர் அந்தோணிராஜ் மற்றும் உறவினர்கள் மருத்துவமனைக்கு வந்தனர்.
குழந்தை பிறந்த மகிழ்ச்சி ஒரு பக்கம் இருந்தாலும், தேர்வை முழுமையாக எழுத முடியாமல் போனது, ரோஸ்மேரிக்கு வருத்தத்தை கொடுத்துள்ளது. ரோஸ்மேரிக்கு இது, இரண்டாவது பிரசவம்.