C-TET - தேர்வு முறையில் மாற்றம்: இனி ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடத்த முடிவு
மத்திய ஆசிரியர் நியமன தகுதிக்காண் தேர்வு (சி-டெட்) முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தற்போது ஆண்டுதோறும் இருமுறை நடத்தப்படும் இந்தத் தேர்வு, இனிமேல் ஒருமுறை மட்டுமே நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய இடைநிலைக்கல்வி வாரியத்தைச் (சிபிஎஸ்இ) சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:
சி-டெட் தேர்வு ஆண்டுதோறும் 2 முறை நடத்தப்பட்டு வருகிறது. இதற்குப் பதிலாக இனிமேல் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே சி-டெட் தேர்வை சிபிஎஸ்இ அமைப்பு நடத்தவுள்ளது. இந்தத் தகவலை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திடம் சிபிஎஸ்இ அமைப்பு தெரிவித்துவிட்டது.
அதில், ஜேஇஇ-மெயின் தேர்வு, நீட் தேர்வு, மருத்துவ படிப்புகளுக்கான தேர்வு போன்ற பல்வேறு தேர்வுகளை நடத்த வேண்டிய பொறுப்பு இருப்பதால், தனக்கு அதிக பணிச்சுமை ஏற்பட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளது.
இதனால் சி-டெட் தேர்வை ஒருமுறை மட்டுமே நடத்த தீர்மானித்திருப்பதாக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, சிபிஎஸ்இ, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், ஆசிரியர் கல்வி தேசிய கவுன்சில் அதிகாரிகள் ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.
அப்போது சி-டெட் தேர்வை ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே சிபிஎஸ்இ நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.
சி-டெட் தேர்வு தற்போது ஆண்டுதோறும் பிப்ரவரி, செப்டம்பர் மாதங்களில் நடத்தப்பட்டு வருகிறது. இதில் நாடு முழுவதிலும் இருந்து 9 லட்சம் பேர் வரையிலும் கலந்து கொள்வார்கள்.
இந்நிலையில் சி-டெட் தேர்வை ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடத்துவது என்று முடிவு செய்யப்பட்ட போதிலும், எந்த மாதத்தில் அதை நடத்துவது என்பது தொடர்பாக முடிவெடுக்கப்படவில்லை.
முன்னதாக, துணை பேராசிரியர்கள் பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய தேசிய அளவில் நடத்தப்படும் தகுதிக்காண் தேர்வை (நெட்) இனிமேல் நடத்துவதில்லை என்று சிபிஎஸ்இ முடிவு செய்தது குறிப்பிடத்தக்கது.