மேல்நிலைப்பள்ளிகளில் பாடப் பிரிவு வாரியாக இட ஒதுக்கீடு: பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு
தமிழகத்தில் மேல்நிலைப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின்போது பாடப்பிரிவு வாரியாக இட ஒதுக்கீட்டு முறையைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ரெ.இளங்கோவன் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்தி: மாநிலத்தின் அதிகார வரம்புக்குள் செயல்படும் அனைத்து வகைப் பள்ளிகளிலும் (சிறுபான்மை கல்வி நிலையங்கள் நீங்கலாக) பழங்குடியினர், ஆதி திராவிடர், பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு கீழ்க்காணும் விகிதத்தில் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.
இட ஒதுக்கீடு விகித விவரம்:மேல்நிலைப்பள்ளிகள் கடைப்பிடிக்கப்பட வேண்டிய இட ஒதுக்கீடு விவரம் (சதவீத அடிப்படையில்): பொதுப்பிரிவு- 31, பிற்படுத்தப்பட்டோர்- 26.5, பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர்- 3.5, மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர்- 20, ஆதி திராவிடர்- 18 (ஆதி திராவிட அருந்ததியர்கள் இருப்பின் 18 சதவீதத்தில் இருந்து 3 சதவீத இடங்களை முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கீடு செய்ய வேண்டும்), பழங்குடியினர்- 1.
மேற்கண்ட அட்டவணையில் தெரிவித்துள்ளவாறு மாணவர் சேர்க்கையின்போது பொதுப்பிரிவுக்கு 31 சதவீத இடத்துக்கான பட்டியல் முதலில் தயாரிக்கப்பட வேண்டும். மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் அந்தந்தப் பிரிவுக்கான பட்டியல் தயாரிக்கப்பட வேண்டும்.
முதன்மைக் கல்வி அலுவலர்கள் உறுதி செய்ய... மேற்கூறப்பட்ட விகிதத்தில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு மேல்நிலைக் கல்விக்கான மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. மேலும், அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கையை அவர்கள் உறுதி செய்ய வேண்டும்