முறைகேடுகளில் ஈடுபட்டால்... துணைவேந்தர்களுக்கு எச்சரிக்கை
'பல்கலை கழகங்களில், இனி முறைகேடுகள் நடந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, பல்கலை துணைவேந்தர்கள் மற்றும் பதிவாளர்களுக்கு, உயர்கல்வித் துறை செயலர், கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் மற்றும் செயலர் சுனில்பாலிவால் ஆகியோர், சென்னையில், உயர்கல்வி மன்றத்தில், துணைவேந்தர்கள், பதிவாளர்கள் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரிகளை அழைத்து, கூட்டம் நடத்தினர். அப்போது, பல்கலைகளின் நிர்வாக பிரச்னைகள், நிதி நிலை, தணிக்கை அறிக்கை போன்றவை குறித்து, பல்கலை துணைவேந்தர்களும், பதிவாளர்களும் சரியான விளக்கம் தர முடியாமல் திணறினர். சிலர், 'தங்கள் பல்கலையில், எந்த ஆவணங்களும் இல்லை' என்றனர். இதனால், அமைச்சரும், செயலரும் அதிர்ச்சி அடைந்தனர்.இதையடுத்து, 'அனைத்து பல்கலையிலும், செலவு கணக்கு, தணிக்கை அறிக்கையை தயாரிக்க வேண்டும். இதுவரை நடந்த முறைகேடுகள் குறித்து, விரிவான விசாரணை நடத்தப்படும். இனி, எந்த முறைகேடும் இருக்கக்கூடாது; தவறுகளை பார்த்து சும்மா இருக்க மாட்டோம்' என, செயலர் சுனில்பாலிவால், எச்சரிக்கை விடுத்தார்.