கலை கல்லூரியில் சேர்ந்தாலும் இன்ஜி., கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம்!
'கலை, அறிவியல் கல்லுாரிகளில் சேர்ந்த மாணவர்களும், இன்ஜி., 'கவுன்சிலிங்'கில் பங்கேற்க முடியும்' என, அண்ணா பல்கலை தெரிவித்துள்ளது.
பிளஸ் 2 முடித்த மாணவர்கள், பி.இ., - பி.டெக்., படிப்பில் சேருவதற்கான கவுன்சிலிங், அண்ணா பல்கலை சார்பில் நடத்தப்படுகிறது. ஜூன், 27 முதல் கவுன்சிலிங் நடத்த, அண்ணா பல்கலை முடிவு செய்துள்ளது. இன்ஜி., கவுன்சிலிங்கில், விரும்பிய பாடம், கல்லுாரி கிடைக்காமல் போனால், என்ன செய்வது என, பயந்த மாணவர்கள், கலை, அறிவியல் கல்லுாரிகளில் சேர்ந்து வருகின்றனர். அவர்களிடம், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ், பள்ளி மாற்று சான்றிதழ், ஜாதி சான்றிதழ்களை பெற்று, கல்லுாரிகளில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இந்நிலையில், கலை, அறிவியல் கல்லுாரிகளில் சான்றிதழ்களை கொடுத்துவிட்டால், இன்ஜி., கவுன்சிலிங்கில் சான்றிதழ்களை எப்படி சமர்ப்பிப்பது என, மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.இது குறித்து, கவுன்சிலிங் அதிகாரிகள் கூறியதாவது: கவுன்சிலிங்கில் பங்கேற்கும் முன், கலை, அறிவியல் கல்லுாரிகளில் சேர்வதால், மாணவர்களுக்கு, எந்த பிரச்னையும் இல்லை. 'கட் - ஆப்' மதிப்பெண்ணின்படி, அவர்களுக்கான கவுன்சிலிங் நடக்கும் நாளில், சான்றிதழ்களின் நகல்களை எடுத்து வர வேண்டும்.
மேலும், எந்த கல்லுாரியில் சேர்ந்தனரோ, அந்த கல்லுாரி முதல்வர் அல்லது முதன்மை நிர்வாகியிடம், அசல் சான்றிதழ்கள் தங்களிடம் உள்ளதாக, கடிதம் பெற்று வர வேண்டும்.அந்த சான்றிதழ்களின் நகல்களில், கல்லுாரி முதல்வரின் சான்றொப்பம் இருக்க வேண்டும்.
கவுன்சிலிங் நாள் வரைக்கும், மாணவர்கள் காத்திருக்காமல், தற்போதே வாங்கி வைத்து கொள்வது நல்லது. கடிதம் மற்றும் நகல்களை காட்டினால், கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம்.ஆனால், இட ஒதுக்கீடு வழங்கப்பட்ட உத்தரவு, மாணவரிடம் வழங்காமல் நிறுத்தி வைக்கப்படும். அந்த மாணவர், அசல் சான்றிதழ்களை வாங்கி வந்தவுடன், இட ஒதுக்கீடு உத்தரவு வழங்கப்படும்.