பிளஸ் 2 தேர்வு முடிவு 9 லட்சம் மாணவர்களுக்கும் செல்போனில் அனுப்பப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்
பிளஸ் 2 தேர்வெழுதியுள்ள 9 லட்சம் மாணவர்களுக்கும் மதிப்பெண்ணுடன் கூடிய தேர்வு முடிவுகள் செல்போனில் அனுப்பப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்
கே.செங்கோட்டையன் தெரிவித்தார்.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்படுகின்றன. இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''12-ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியான அடுத்த 10 நிமிடத்தில், தேர்வெழுதியுள்ள 9 லட்சம் மாணவ-மாணவிகளுக்கும் மதிப்பெண்ணுடன் கூடிய தேர்வு முடிவுகள் அவர்களின் செல்போன் எண்ணுக்கு எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்படும். பொதுத்தேர்வில் மதிப்பெண் குறைந்த மற்றும் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கும் திட்டம் தொடர்ந்து நிறைவேற்றப்படும்.
பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்ட மாற்றம் குறித்து முதல்வருடன் இன்று நான் மற்றும் மூத்த அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினோம். அந்த கூட்டத்தில், பாடத்திட்ட மாற்றம் தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை செயலாளர் விரிவாக எடுத்துரைத்தார்.
தமிழக மாணவர்கள் நீட் உள்ளிட்ட அகில இந்திய அளவிலான நுழைவுத் தேர்வுகளுக்கு தயார்படுத்தும் வகையிலான பாடத்திட்டத்தை உருவாக்குவது குறித்து பரிசீலித்து வருகிறோம்.
இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில், நலிவடைந்த, வாய்ப்பு மறுக்கப்பட்ட குழந்தைகளுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. இதற்கான மாணவர் சேர்க்கை வெளிப்படையாக நடைபெறும் வகையில் ஆன்லைன் முறையை அறிமுகப்படுத்தி உள்ளோம். இந்த வசதியைப் பயன்படுத்தி அனைவரும் ஆன்லைனில் விண்ணப்பித்து வருகிறார்கள். இதுகுறித்து கிராமப்புறங்களிலும் நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. 25 சதவீத இடஒதுக்கீட்டை சரிவர பின்பற்றாத தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்