பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் மாதம் தொடங்க உள்ளது. இவர்களுக்கு பிப்ரவரியில் செய்முறைத் தேர்வுகள் தொடங்கும். இதற்கிடையே, இந்த ஆண்டு குறிப்பிட்ட தேதியில் தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என்பதில் தேர்வுத்துறை முனைப்புக்காட்டி வருகிறது. அதனால் மார்ச் மாதமே பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வுகளை நடத்தும் அறிவிப்பை ஏற்கனவே வெளியிட்டுள்ளது.
மேலும், செய்முறைத் தேர்விலும் பத்தாம் வகுப்பு பிளஸ் 2 மாணவர்கள் காலை, மாலை என பங்கேற்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வரை செய்முறைத் தேர்வில் 24 பேர் கொண்ட குழுக்களாக மாணவர்கள் பிரிக்கப்பட்டு, நாள் ஒன்றுக்கு ஒரு குழு என்ற வகையில் தேர்வு நடத்துவார்கள். ஆனால் இந்த ஆண்டு விரைவாக செய்முறைத் தேர்வை நடத்த முடிவு செய்துள்ளதால், ஒரு குழுவில் 30 பேர் இடம் பெறும் வகையில் மாற்றங்களை கொண்டு வர தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது. அதற்காக தேர்வு மையங்களையும் அதிகரிக்க உள்ளனர்.