பிப்.15 முதல் 'ஸ்டிரைக்' : பஸ் ஊழியர்கள் அறிவிப்பு
சென்னை: 'ஊதிய ஒப்பந்த பேச்சை உடனே துவக்காவிட்டால், பிப்., 15 முதல், ஸ்டிரைக்கில் ஈடுபடுவோம்' என, அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
சென்னையில், கூட்டமைப்பின் நிர்வாகிகள் கூறியதாவது: அரசு போக்குவரத்துக் கழகங்கள், பொதுமக்களுக்கு பல சலுகைகளை வழங்கி வருகிறது. இதற்கான செலவை, அரசு தராததால், வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இதை, நஷ்டம் என, அரசு கணக்கு காட்டுவது சரியல்ல.வருவாய் இழப்பால், ஊழியர்களின் வைப்புத்தொகை, காப்பீட்டு உள்ளிட்ட, 5,000 கோடி ரூபாயை, போக்குவரத்து கழகங்கள் எடுத்து, செலவு செய்து விட்டன. இதனால், ஓய்வூதியர்களுக்கு, பண பலன்கள் கிடைக்கவில்லை. ஊழியர்களுக்கான, 12வது ஊதிய ஒப்பந்தம், 2016 ஆகஸ்டில் முடிந்தது. அதற்கு முன், 13வது ஊதிய ஒப்பந்த பேச்சு நடத்தி முடித்திருக்க வேண்டும். இதுவரை, பேச்சு நடத்தவில்லை. பேச்சை துவக்கா விட்டால், ஸ்டிரைக்கில் ஈடுபடுவோம் என, நாளை அரசுக்கு, 'நோட்டீஸ்' அளிக்க உள்ளோம். அரசு அலட்சியம் காட்டினால், பிப்., 15 முதல், ஸ்டிரைக்கில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.