இந்தியாவில் 2012-ல் 6 லட்சம் பேர் இறப்புக்கு காற்று மாசு காரணி: உலக சுகாதார அமைப்பு
தலைநகர் டெல்லியில் அயல்நாட்டு பயணிகள்
தொழிற்சாலை, வாகனப்புகை மற்றும் பயோமாஸ் ஆகிய காரணங்களினால் மாசடைந்த காற்றை சுவாசித்து 2012-ம் ஆண்டில் 6 லட்சம் இந்தியர்கள் இறந்துள்ளதாக ஐ.நா.வின் உலகச் சுகாதார மையத்தின் ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
உலகம் முழுதும் மாசடைந்த காற்றுக்கு சுமார் 30 லட்சம் பேர் இறந்துள்ளனர் என்றால், இந்தியாவில் இதன் பாதிப்பினால் சுமார் 6 லட்சம் பேர் 2012-ம் ஆண்டு இறந்துள்ளதாக திங்களன்று வெளியிடப்பட்ட உலகச் சுகாதார மைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழிற்சாலை கரியமிலவாயு வெளியேற்றம் உட்பட வாகனப்புகை, பயோமாஸ் ஆகியவற்றின் காரணமாக காற்றில் கலக்கும் நச்சு நுண் துகள் (PM2.5) நேரடி அல்லது மறைமுக தாக்கத்தினால் இருதய நோய் மற்றும் நுரையீரல் புற்று நோய் காரணமாக இந்த இறப்புகள் நிகழ்ந்துள்ளதாக அந்த அறிக்கை எச்சரித்துள்ளது.
கரியமிலவாயு வெளியேற்றத்தில் எந்த ஒரு சமரசத்திற்கும் இடம் தர மறுக்கும் சீனாவில் சுமார் 8 லட்சம் பேர் மரணித்துள்ளனர்.
வெளிப்படையாக கிடைக்கும் காற்றிலடையும் மாசு பற்றிய தேசியத் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு கணித மாதிரியில் இந்த எண்ணிக்கையை உலகச் சுகாதார மையம் வந்தடைந்துள்ளது.
இந்தியாவில் மாரடைப்பு நோய்க்கு 2,49,388 பேர்களும், ஸ்ட்ரோக் பாதிப்பில் 1,95,001 பேர்களும் COPD என்று அழைக்கப்படும் நீண்ட நாளைய நுரையீரல் அடைப்பு நோய்க்கு 1,10,500 பேர்களும் 26,334 பேர் நுரையீரல் புற்று நோய்க்கும் பலியாகியுள்ளனர்.
ஆனால் இந்த எண்ணிக்கைகளிலும் காற்றில் உள்ள பிற மாசுக்கூறுகளான நைட்ரஜன் ஆக்சைடுகள், அல்லது ஓசோன் ஆகியவற்றினால் ஏற்படும் நோய் பற்றி குறிப்பிடப்படவில்லை என்று இந்த ஆய்வை நடத்தியவர்கள் தெரிவிக்கின்றனர்.
PM2.5 என்ற காற்றில் கலக்கும் நச்சு நுண் துகள்களின் பாதிப்பினால் நீண்ட நாளைய நோய்களும் இதனால் குறிபிட்ட ஆயுளுக்கு முன்னதாகவே இறப்புகள் ஏற்படுகிறது.
இதன் பாதிப்பு உலகம் முழுதும் இருந்தாலும் குறைந்த, நடுத்தர வருவாய் நாடுகளில் இதன் தாக்கத்தினால் இறப்புகள் அதிகம் ஏற்பட்டு வருகிறது.
உலகச் சுகாதார அமைப்பு பிரிட்டனில் உள்ள பாத் பல்கலைக்கழக உதவியுடன் கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறம் உட்பட சுமார் 3,000 இடங்களில் கண்காணிப்பு நிலையங்களை நிறுவி சாட்டிலைட் அளவுகள், காற்றுப் போக்குவரத்து மாதிரிகள் ஆகியவற்றை ஆராய்ந்துள்ளன.
நகரங்களில் வாழும் 80% மக்களுக்கு மாசடைந்த காற்றினால் கடும் பாதிப்புகள் ஏற்படுகின்றன என்கிறது இந்த ஆய்வு. குறிப்பாக குறைந்த வருவாய், நடுத்தர வருவாய் நாடுகளில் உள்ள 98% நகரங்கள் இத்தகைய காற்று மாசிற்கு ஆட்பட்டுள்ளன. உலகச் சுகாதார அமைப்பு நிர்ணயித்துள்ள வரம்புகளை இந்த நகரங்களின் காற்று மாசு கடந்துள்ளது. அதிவருவாய் நாடுகளில் 56% நகரங்கள் பாதிப்படைகின்றன என்று எச்சரித்துள்ளது இந்த ஆய்வு