இந்தியாவின் பெருமை' ஜாதவ் பயேங்! தனி மனிதன் உருவாக்கிய 1,360 ஏக்கர் காடு!
தனி ஒருவன்
காட்டையே உருவாக்கிய தனி மனிதரின் கதை !யார் இந்த மாமனிதர் ?!
உலக வரலாற்றிலேயே எவரும் செய்யாத ஒரு மாபெரும் சாதனையை செய்துவிட்டு மிக அமைதியாக அடக்கமாக இருக்கிறார் ஒருவர். மனித குலத்திற்கு அவர் செய்த சிறந்த சேவை இது...எல்லோருக்கும் ஒரு முன்னுதாரணமாக இருக்கிறார். 'தனது சமூகத்திற்கு செய்ய வேண்டியது தனது கடமை' என ஒற்றை வரியுடன் தனது சாதனை குறித்து சொல்லி
முடித்துகொள்கிறார். அப்படி என்ன செய்தார் ?!!
கிட்டத்தட்ட 1,360 ஏக்கர் நிலப் பரப்பளவில் தனி நபராக ஒரு காட்டை உருவாக்கி இருக்கிறார்...! யார் இவர் ?
அசாம் மாநிலத்தை சேர்ந்த ஒரு கிராமவாசி திரு.ஜாதவ் பயேங். அங்குள்ள மக்கள் இவரை 'முலாய்' என அழைக்கின்றனர். பிரம்மபுத்திரா நதியில் 1979 ஆம் ஆண்டில் வெள்ளத்தில் அதிக அளவில் பாம்புகள் அடித்து வர பட்டிருக்கிறது. வெள்ளம் வடிந்த பின் மேலும் பல ஊர்வன இறந்த நிலையில் அங்கே கிடந்திருக்கின்றன. மரங்கள் இன்றி அதிகரித்த வெப்பத்தினால் தான் இந்நிலை என புரிந்து கொண்டபோது இவரது வயது 16 ! பின் இது சம்பந்தமாக வனத்துறையை அணுகி விசாரித்த போது ஆற்றின் நடுவே உள்ள அந்த மணல் படுகையில் மரங்கள் எதுவும் வளராது மூங்கில் மரம் வேண்டுமானால் வளரலாம்,முடிந்தால் முயற்சி செய்து பாருங்கள் என்று சொல்லி இருக்கிறார்கள்...ஒருவரும் உதவி செய்யாத போது தனி நபராக செயலில் இறங்கி விட்டார்
2008-ஆம் ஆண்டு வரை விளம்பர வெளிச்சம் எதுவுமில்லாமல் ஒருகாடு பரப்பளவிலும் உயரத்திலும் அடர்த்தியிலும் பெருகிக் கொண்டே சென்றிருக்கிறது. கடந்த 2008-ஆம் ஆண்டில், 115 யானைகள் இந்தக் காட்டுப் பகுதிக்குள் புகுந்துவிட்டன. அவற்றைத் துரத்தி வந்த வனத்துறையினர் இந்தக் காட்டைப் பார்த்து அதிர்ச்சியும் ஆச்சர்யமும் அடைந்திருக்கின்றனர்.
"அரசுப் பதிவேட்டில் இடம்பெறாத இந்தக் காடு, இங்கே எப்படி உருவானது?' என்று வியந்திருக்கின்றனர். முலாய் பற்றிக் கேள்விப்பட்டு அவரை சந்தித்து விஷயம் முழுவதும் அறிந்து மிக மகிழ்ச்சி அடைந்திருக்கின்றனர்.
தனது வளர் இளம் பருவத்தில் இந்தப் பணியைத் தொடங்கியவருக்கு இன்றைக்கு வயது 50!
காட்டிற்குள்ளேயே மனைவி, இரு மகன்கள், மகளுடன் வாழ்வதற்குப் போதுமான சிறிய குடில் ஒன்றை அமைத்திருக்கிறார். வருமானத்திற்காக, சில மாடுகளை வளர்த்து அதன் பாலை விற்று குடும்பச் செலவைப் பார்த்துக் கொள்கிறார்.
மரங்களே வளராது என்று கூறிய பகுதியில் தேக்கு, அகில், சந்தனம், கருங்காலி, ஆச்சா போன்ற மரங்களும் மூங்கில் காடுகளும் பரவியிருக்கின்றன. காட்டு விலங்குகளும் பறவைகளும் அதிக அளவில் இங்கே வாழ்ந்து வருகின்றன. 100 யானைகளுக்கும் மேற்பட்டவை ஆறு மாதங்களுக்கு மேல் இங்கு வந்து தங்கிச் செல்கின்றன. பறவைகள், விலங்குகளின் சொர்க்கபுரிதான் இந்த "முலாய் காடுகள்'.